Published : 10 Mar 2022 04:00 AM
Last Updated : 10 Mar 2022 04:00 AM
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களும் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருநெல்வேலி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஜேஇஇநுழைவுத் தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க ஆட்சியர் வே.விஷ்ணு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 21 மாணவ, மாணவியர் இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஜேஇஇ நுழைவுத் தேர்வு தொடர்பாக ஆன்லைன் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாணவர்களை ஊக்கப்படுத்த உயர்கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை அவர்கள் நேரில் பார்வையிட ஆட்சியர் விஷ்ணு ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி கடந்த மாதம் 21 மாணவ, மாணவியரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை ஐஐடி கல்லூரிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி 21 மாணவர்களும், இந்த பயிற்சிக்கான துணை ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் பிரபு ரஞ்சித் எடிசன், ஆசிரியை சியாமளா பாய் ஆகியோரும் நேற்று தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த மாணவ, மாணவிகள் பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். முதல் முறையாக மகிழ்ச்சியோடு விமானத்தில் பயணித்தனர். மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து சென்னை சென்ற மாணவ, மாணவியர் ஐஐடி வளாகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் சென்று, அங்கு என்னென்ன படிப்புகள் உள்ளன, என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை நேரில் பார்வையிட்டனர்.
மாலையில் சென்னை பிர்லா கோளரங்கத்தை பார்வையிட்டனர். இம்மாணவர்கள் இன்று (மார்ச் 10) சென்னை அண்ணா நூலகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையரை சந்தித்து கலந்துரையாடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT