Published : 10 Mar 2022 04:00 AM
Last Updated : 10 Mar 2022 04:00 AM

நெல்லை சாப்டர் மேல்நிலைப் பள்ளி 3 மாதங்களுக்கு பின் திறப்பு: எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

திருநெல்வேலியில் சாப்டர் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் பள்ளி அருகே போராட்டம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி 3 மாதத்துக்குப்பின் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

இப்பள்ளியில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 6 மாணவர்கள் காயமடைந்தனர். அரையாண்டு தேர்வுக்குப்பின் கடந்த ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆனால் சாப்டர் பள்ளி திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர்கள் தரப்பில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வந்தன. இதையடுத்து மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் பள்ளியை முழுமையாக ஆய்வு செய்து, வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுத்தன.

3 மாத இடைவெளிக்குப்பின் பள்ளி நேற்று மீண்டும் திறக்கப்பட்டு 6, 8,10, 12-ம் வகுப்புகள் மட்டும் நடைபெற்றன. 7,9,11-ம் வகுப்புகள் இன்று நடைபெறுகின்றன. அடுத்த ஒரு வாரத்துக்கு இத்தகைய சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்பட்டதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனிடையே சாப்டர் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் பள்ளி அருகே போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை மாநகர காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x