Published : 09 Mar 2022 04:55 PM
Last Updated : 09 Mar 2022 04:55 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு பரிசுப் பெட்டகம் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில், ஆக்சிஸ் வங்கி நிறுவனத்தின் உதவியோடு மாணவர்களுக்கான சுகாதாரப் பதிவு இணையதள தொடக்க விழா துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (மார்ச்.9) நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இணைய சேவையைத் தொடங்கி வைத்து பேசுகையில், ''இந்தியாவிலேயே முதல்முறையாக புதுச்சேரியில் இந்த இணைய சேவை தொடங்கப்பட்டிருப்பது மகிச்சியைத் தருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் சுகாதாரம் குறித்த தரவுகளை நாம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு ஏற்கெனவே வைத்திருந்தேன். இது ஒரு மிகப்பெரிய கனவு திட்டம். அது இப்போது நடந்தேறியிருக்கிறது. சுகாதார அமைப்புகளின் அறிக்கைப்படி உலகில் 60-70 சதவீத குழந்தைகள் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலைதான். குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் அவர்கள் வளரும்போது அவற்றை சரி செய்ய சுகாதாரப் பதிவு உதவியாக இருக்கும். பெரும்பாலான நோய்களுக்கு காரணம் தொடக்க நிலையிலேயே ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடும் சரி செய்யப்படாததுதான். அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கல்விப் பதிவேடு பராமரிக்கப்படுவதைப் போலவே சுகாதாரப் பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும். பிரதமர் ஸ்வச் பாரத் இயக்கம் பற்றி கூறியபோது சுத்தம் செய்யும் நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு நோய்த்தொற்று பெருமளவு குறைந்து இருக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து இருக்கிறது. அதுவே ஸ்வச் பாரத் திட்டத்தின் பலன்.
ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய கவனம் செலுத்தினால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கும், கல்வியில் முன்னேற்றத்துக்கும் உதவியாக இருக்கும். குழந்தைகள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் நல்ல முறையில் கல்வி பெற வேண்டும், விளையாட்டுகளில் சாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் புதுச்சேரியில் உள்ள அனைத்து குழந்தைகளின் சுகாதாரப் பதிவும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதில் அங்கன்வாடி குழந்தைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்யும் போது தாய்மார்களுக்கு இருக்கும் குறைபாடுகளை கண்டறிய முடியும். இந்த திட்டம் பல்கலைக்கழகத்துக்கும் விரிவுபடுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.
பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இத்திட்டம் போன்று இன்னும் பல திட்டங்களை கொண்டுவர கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு பரிசுப் பெட்டகம் கொடுக்கலாம் என்று நானும், முதல்வரும் ஆலோசனை செய்துள்ளோம். மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் கொடுக்கலாம் என்றும் ஆலோசித்தோம். கூட்டு முயற்சியுடன் நல்ல திட்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது ஆரோக்கியமான புதுச்சேரியை உருவாக்க முடியும்'' என்றார்.
மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் உறுதுணை: அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, ''புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் தகவலாக மட்டுமே இருந்து வருகிறது. அத்தகவலை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை நினைத்த நேரத்தில் பார்ப்பதற்கும், மாணவர்களின் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கும் இது ஏதுவாக இருக்கும். புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியமாக, கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதல் அளித்து வருகிறார். மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆளுநருக்கு நன்றி'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT