Published : 09 Mar 2022 02:12 PM
Last Updated : 09 Mar 2022 02:12 PM

நாடு முழுவதும் சீர்திருத்த திருமணங்களை சட்டபூர்வமாக்க வேண்டும்: தமிழச்சி எம்பி இல்லத் திருமண நிகழ்வில் ஸ்டாலின் விருப்பம்

திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 'தமிழகத்தில் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்ற நிலை எப்படி இருக்கிறதோ, அதேபோல இந்தியா முழுமைக்கும் இந்தத் திருத்ததை கொண்டுவர நாடாளுமன்றத்தில், தமிழக எம்பிக்கள் தீர்மானம் கொண்டு வரவேண்டும்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் மகேந்திரன் மகன் கீர்த்தனுக்கும் சென்னை திருவான்மியூரில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சிக்காக ஆற்றிய பணிகளைப் பாராட்டி பட்டியலிட்டார்.

பின்னர் அவர் பேசியது: "நான் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பிறகு, அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், இனி வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நாம் தான் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்தச் சீர்திருத்தத் திருமணம், இதனைச் சீர்திருத்தத் திருமணம் என்று சொல்லக்கூடாது. இப்போது இதை திராவிடத் திருமணம் என்றே சொல்லலாம். ஏனென்றால் திராவிட மாடலில்தான் நம்முடைய ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. எனவே இந்தச் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று முதன்முதலில் தமிழகத்தில் அண்ணா தலைமையில் 1967-ல் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் முதல் தீர்மானமாக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றித் தந்தார்கள்.

அந்தத் தீர்மானம் இன்றைக்கு எந்த அளவிற்கு மக்களிடத்தில் பரவலாகி, விரிவாகி, பிரபலமாகி இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதைத்தான் தொடர்ந்து கருணாநிதி சொன்னார். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் இந்தச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனவே, இங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம், நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எவ்வாறு தமிழகத்தில் இந்தச் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்ற நிலை இருக்கிறதோ, அதேபோல இந்தியா முழுமைக்கும் இந்தத் திருத்ததை கொண்டுவர, நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தருவதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x