Published : 09 Mar 2022 06:08 AM
Last Updated : 09 Mar 2022 06:08 AM
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டம் நவீனத் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார்.
தேசிய அறிவியல் தொழில்நுட்பக் குழுமம், மாநில உயர்கல்வி மன்றம் சார்பில், தேசிய கணிதமற்றும் அறிவியல் தினத்தை முன்னிட்டு 2 நாள் சிறப்புக் கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நேற்று தொடங்கியது.
தமிழக உயர்கல்வித் துறைஅமைச்சர் கே.பொன்முடி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போதைய காலகட்டத்தில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பொறியியல் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. எனவே, 25 ஆண்டுகளுக்குப் பின், அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தை மாற்றமுடிவு செய்யப்பட்டு, அதற்காகஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவில் 90 பேர்
இதில், பல்வேறு துறை பேராசிரியர்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள் என 90 பேர் இடம் பெற்றுள்ளனர்.
சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களின் பாடங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அதற்கேற்ப புதிய பாடத் திட்டம் உருவாக் கப்படும்.
மாநில கல்விக் கொள்கை குழு
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்குப் பதிலாக, மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட உள்ளது. இதற்காக விரைவில் புதிய குழு அமைக்கப்படும்.
தற்போது உக்ரைனில் இருந்துநாடு திரும்பிய தமிழக மாணவர்கள் உயர்கல்விப் பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இன்றும் (மார்ச் 9) கருத்தரங்கம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT