Published : 09 Mar 2022 05:15 AM
Last Updated : 09 Mar 2022 05:15 AM
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, போட்டி வேட்பாளராக வெற்றிபெற்ற காங்கயம் நகராட்சி துணைத் தலைவர், தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுகவும், ஒரு வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றது.
திமுக கூட்டணியில், காங்கயம்நகராட்சி தலைவர் பதவி, கூட்டணிக்கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கி, திமுக தலைமை அறிவித்தது.காங்கிரஸ் கட்சி சார்பில் நகராட்சி தலைவர் வேட்பாளராக 10-வது வார்டு உறுப்பினர் ஹேமலதா அறிவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 4-ம் தேதி காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித்தலைவர் பதவிக்கு, மறைமுகத் தேர்தல் நடந்தது. கூட்டணி முடிவின்படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தஹேமலதா வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, திமுகவை சேர்ந்த 1-வது வார்டுஉறுப்பினர் சூர்யபிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் ஹேமலதாவை உறுப்பினர்கள் முன்மொழியாததால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. சூர்யபிரகாஷ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக, 16-வதுவார்டில் வெற்றிபெற்ற கமலவேணியை கட்சி தலைமை அறிவித்திருந்தது. மறைமுகத் தேர்தலில், அவரை எதிர்த்து, திமுகவை சேர்ந்த 4-வது வார்டு உறுப்பினர் இப்ராகிம் கலிலுல்லா, 8-வது வார்டு உறுப்பினர் திமுகவை சேர்ந்த வளர்மதி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 12 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் இப்ராகிம் கலிலுல்லா, துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கட்சி தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரனிடம் இப்ராகிம் கலிலுல்லா நேற்று வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT