Published : 09 Mar 2022 05:00 AM
Last Updated : 09 Mar 2022 05:00 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகொத்தூரில், பெண்ணை பலி கொடுப்பது போன்ற நடுகல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதாக, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகொத்தூரில் உள்ள சாக்கியம்மாள் கோயிலில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு மண்ணில் புதைந்திருந்த நடுக்கல்லை ஊர்மக்கள் உதவியுடன் வெளியே எடுத்தனர்.
இது தொடர்பாக காப்பாட்சியர் கூறும்போது, இது நமது மாவட்டத்தில் கிடைத்த பெண்கள் தொடர்பான நடுகல்லில் மூன்றாவதாகும். இந்த நடுகல் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நடுகல்லில் உள்ள பெண், தோளில் மாலையுடனும், பிற அணிகலன்களுடனும், ஒரு விரலை உயர்த்தி காட்டிய நிலையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது, இப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தெரிய வருகிறது.
அப்பெண்ணை ஒரு ஆண் வீரன் வெட்டுகிறான். அவனும் போரிடும் நிலையில் இல்லை என்பது தோற்றத்தில் இருந்து தெரிய வருகிறது. நரபலி கொடுத்தபின் இவரை தெய்வமாக அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு இருக்கிறார்கள் என்பது இந்த நடுகல் அமைப்பில் இருந்து தெரிய வருகின்றது.
தியாகத்தின் மறுஉருவம்
இதன் தொடர்ச்சியாக, சிவன் கோயில் சீரமைப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு நடுகல் இதன் தோற்றத்தினை அப்படியே பெற்று இருந்ததுடன் அதில் கல்வெட்டும் காணப்பட்டது. அதில், "தீத்தமலை உடநே தலை வெட்டு" என்ற வாசகம் இடம்பெற்று இருக்கின்றது. தீர்த்தம் என்ற இடம் இந்த இடத்தில் இருந்து, 4 கிலோ மீட்டர் தொலைவில் சிவன்கோயில் உள்ள இடம் ஆகும். தியாகத்தின் மறு உருவம் பெண் என்பதற்கான ஆதாரமாக, ஒரு வேண்டுதலுக்காகவோ, போருக்காகவோ, வேறு முக்கிய நிகழ்வுக்காகவோ இவர் தானாக நரபலிக்கு முன் வந்திருப்பது நடுகல் மூலம் தெரிய வருகிறது. சாக்கியம்மாள் என்று இவர்கள் பெயர் வைத்திருப்பது தெருக்கூத்தின் வழிவந்ததாக இருக்கக் கூடும். ஆனால் இவருக்கு வேறு பெயர் இருந்திருக்கும். காலத்தின் மாற்றத்தில் இது செல்லியம்மன் என அழைக்கப்படுகிறது. தன் தலையை தானே அறுத்து பலியிடும் நவகண்ட சிற்பத்திலிருந்து இது வேறுபட்டது. இது தமிழகத்தின் நடுகல் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT