Published : 09 Mar 2022 08:21 AM
Last Updated : 09 Mar 2022 08:21 AM
பெரும்பாக்கம்: பெரும்பாக்கத்தில் காவல் நிலையம் தொடங்கப்பட்டும் அங்கு வழக்குப் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
பள்ளிக்கரணை காவல் நிலைய சரகத்தில் உள்ள பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் மற்றும் ஒட்டியம்பாக்கம் பகுதிகளைப் பிரித்துக் கடந்த 17.12.2020-ல் பெரும்பாக்கம் காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. 12 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் இங்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதில்லை. மாறாக அருகில் உள்ள பள்ளிக்கரணை காவல் நிலையத்தில்தான் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
பட்டினப்பாக்கத்தில் உள்ள குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் மற்றும் அமைப்பு (Crime and Criminal Tracking Network and Systems) என்ற நிறுவனம் சார்பில் சி.எஸ்.ஆர்., எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கான சாஃப்ட்வேர் இன்னும் வழங்கவில்லை என்பதே இதற்குக் காரணம். மேலும் அதற்குண்டான கணினியும் இன்னும் வழங்கவில்லை. இதனால், ஏற்கெனவே இருந்த பள்ளிக்கரணை காவல் நிலையத்திலேயே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாகப் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஆகிறது. மேலும், வழக்குப்பதிவு செய்வதிலும் விசாரணை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் நிலவுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ``இதுவரை இங்கு ஆய்வாளர்களாக இருந்த 4 பேரில் யாரும் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகவும் இல்லை. பொதுமக்கள் வசதிக்காகத் தொடங்கப்பட்ட காவல் நிலையம், அவர்களுக்கு அலைச்சலையே ஏற்படுகிறது. காவல் துறையினர் பொது மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இவ்விஷயத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி தலையிட்டு பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக அனைத்து பணிகளையும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT