Published : 09 Mar 2022 07:24 AM
Last Updated : 09 Mar 2022 07:24 AM
சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கல்வி குறித்து மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்ககம் சார்பில் உலகமகளிர் தின விழா சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. இதைஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற மருத்துவப் பணியாளர்களுக்கு பரிசுகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மருத்துவத் துறையில் பணிஆற்றுவதில் 70 சதவீதம் பேர்பெண்கள். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கருணாநிதி வழங்கினார். தற்போது பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை முதல்வர் ஸ்டாலின் வழங்கிஉள்ளதால், தமிழகத்தின் 21 மேயர்களில் 11 பேர் பெண்களாக உள்ளனர். நாட்டிலேயே இந்த எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். முதல்வர் அறிமுகப்படுத்திய பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் மூலம் தினமும் 35 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.
தமிழகத்தில் கரோனா பரவல்மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. 495 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். பல்வேறு ஏற்பாடுகள், அறிவிப்புகள் செய்தும், கடந்த வாரம் நடந்த 23-வது மெகா முகாமில் 6 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டது வருத்தம் அளிக்கிறது. தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். தமிழகத்தில் இன்னும் 1.30 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.
அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால், மக்கள் அவசியம் தடுப்பூசி போட வேண்டும். வரும் 12-ம் தேதி நடக்க உள்ள 24-வது மெகா முகாமை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உக்ரைனில் இருந்து வந்துள்ள தமிழக மாணவர்களின் கல்வி குறித்து மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சிக்கல் காரணமாக இப்பணி தாமதம் ஆகியுள்ளது. விரைவில் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT