Published : 09 Mar 2022 05:10 AM
Last Updated : 09 Mar 2022 05:10 AM

உசிலம்பட்டி, திருமங்கலம் நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுக அறிவித்த வேட்பாளர்கள் வெற்றிபெற முடியுமா? - நடைமுறை சிக்கல்களால் கட்சியினர் தவிப்பு

சகுந்தலா

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலத்தில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களை வெற்றிபெற வைப்பதில் சிக்கல் நீடிப்பதால், பறிக்கப்பட்ட கட்சிப் பதவி மீண்டும் கிடைக்குமா என்ற தவிப்பில் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர்.

திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக- 18, அதிமுக - 6, தேமுதிக -2, காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றது. தலைவர் பதவி வேட்பாளராக 6-வது வார்டு கவுன்சிலர் ரம்யா, துணைத் தலைவர் பதவி வேட்பாளராக 21-வது வார்டு கவுன்சிலர் ஆதவனை திமுக தலைமை அறிவித்தது.

ஆனால் திமுக நகர் பொறுப்பாளர் முருகன், தனது மருமகள் சர்மிளாவை போட்டி வேட்பாளராக்க அறிவித்து தேர்தல் நாளான கடந்த மார்ச் 4-ம் தேதி ஆயத்தமாக வந்தார். யாரும் மனு செய்யாத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல், உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகளில் திமுக- 12, அதிமுக -9, அமமுக -2, காங்கிரஸ்-1 ஆகியோர் வெற்றிபெற்றனர். இதில் தலைவர் பதவிக்கு 10-வது வார்டு கவுன்சிலர் செல்வியையும், துணைத்தலைவர் பதவிக்கு 19-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் தேன்மொழியையும் வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், திமுக போட்டி வேட்பாளராக களமிறங்கிய 11-வது வார்டு திமுக கவுன்சிலர் சகுந்தலா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செல்வி 6 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இந்த 2 நகராட்சிகளிலும் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்கள் தலைவராக முடியவில்லை. இதையடுத்து திருமங்கலம் நகர பொறுப்பாளர் சி.முருகன், உசிலம்பட்டி நகர செயலாளர் எஸ்.தங்கமலைப்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் இ.சுதந்திரம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சோலை எம்.ரவிக்குமார், உசிலம்பட்டி நகர இளைஞரணி அமைப்பாளர் மொ.சந்திரன் ஆகியோரை திமுக தலைமை தற்காலிகமாக நீக்கியது.

இந்த நகராட்சிகளில் கட்சி தலைமை அறிவித்த வேட்பாளர் கள் வெற்றி பெற வேண்டும். இதை செய்துவிட்டால் மீண்டும் கட்சி பதவிகளை பெற்று தருவ தாக தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் உறுதி அளித்துள்ளார். இது நடக்குமா என் பது கேள்விக்குறியாக உள்ளது.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியது: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் மீது தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. இதனால் தூதுவர்கள் மூலம் பேச்சு நடக்கிறது. உசிலம்பட்டி நகர் தலைவராக தேர்வான சகுந்தலா இன்று பதவி ஏற்கிறார். இதற்கான பணிகள் நடக்கின்றன. நீக்கப்பட்ட நிர்வாகிகள் சகுந்தலாவை சமா தானப்படுத்த முயன்றும் முடிய வில்லை. அவருக்கு அதிமுக -9, அமமுக -2 கவுன்சிலர்கள் ஆதரவு இருப்பதால், திமுக தயவின்றியே தலைவர் பதவியில் தொடரலாம் என்பதால் உறுதியாக உள்ளார். அதிக பணமும் செலவு செய்துவிட்டதால் பின்வாங்கும் மன நிலையில் இல்லை. இத னால் பதவி இழந்தவர்கள் தவிக்கின்றனர்.

திருமங்கலத்தில் முருகன், தனது கட்டுப்பாட்டில் வைத்தி ருந்த 12 கவுன்சிலர்களில் தற் போது 4 பேர் மட்டுமே அவருடன் உள்ளனர். அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதால் கவுன்சிலர்க ளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் 17 பேர் வரை கட்சித் தலைமை சொல்வதை கேட்க தயாராக உள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் தேர்தல் நடந்துவிடும். அப்போது முருகன் ஒதுங்கிக்கொண்டு, ரம்யாவை வெற்றிபெற வைத்தால் அவருக்கு நகர் செயலாளர் பதவி மீண்டும் கிடைக்கும். அதேநேரம், முருகன் தனது உறவினரான ராமநாதபுரம் முன்னாள் எம்பி பவானி மூலமும், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர்.பாலு மூலமும் தனது மருமகளை தலைவராக்க காய் நகர்த்தி வருகிறார்.

இப்படி பல சிக்கல்கள் தொடர் வதால் ஒன்றிய, நகர் செயலாளர் பதவிகளை மீண்டும் பெற முடியுமா என்பது கேள்விக்குறியாக உள் ளது. அது நடக்காவிட்டால் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவும் மணிமாறன் திட்டமிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x