Published : 09 Mar 2022 05:10 AM
Last Updated : 09 Mar 2022 05:10 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை திடீரென பரவலாக மழை பெய்தது. உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பணி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் வேளையில் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை 2.30 மணி முதல் 5 மணி வரை பெய்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் காலை நேரத்தில் பணிகளுக்கு செல்வோர் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பாதிப்படைந்தனர். தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம் சகதிக் காடாக மாறியதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
இதனை அறிந்ததும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உடனடியாக சில பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மழைநீரை உடனடியாக அகற்ற அவர் உத்தரவிட்டதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து டேங்கர் லாரிகள் மூலம் மழைநீரை உறிஞ்சி எடுத்து அகற்றினர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது.
இதேபோல் திருச்செந்தூர், காயல் பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் சற்று தணிந்தது.
இதேநேரம் திடீர் மழையால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக உற்பத்தி யாளர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்களில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி தற்போது தான் தொடங்கி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திடீரென பெய்த மழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பில் இருந்து மீண்டு, உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கு வதற்கு 10 நாட்கள் வரை ஆகும் என உற்பத்தியாளர்கள் கூறினர்.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் திருச்செந்தூரில் 19 மி.மீ., தூத்துக்குடியில் 18 மி.மீ., காயல்பட்டினத்தில் 2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT