Published : 08 Mar 2022 06:57 PM
Last Updated : 08 Mar 2022 06:57 PM

மதுரை மாநகராட்சியில் அதிருப்தி திமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்த முடிவு: மண்டலத் தலைவர் பொறுப்புகளை ஏற்பார்களா?

மதுரை மாநகராட்சி அலுவலக அறைகள் புதுப்பொலிவு பெறுகிறது.

மதுரை: ’மதுரை மாநகராட்சியில் மேயர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் முக்கிய கவுன்சிலர்கள், மாநகராட்சி மண்டலத் தலைவர் பதவிகளை ஏற்பார்களா? அதைப் பெற்றுக் கொண்டு சமாதானம் ஆவார்களா?’ என்ற விவாதம் எழுந்துள்ளது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி எடுக்கப்பட இருக்கிறது.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டு கவுன்சிலர்கள் தேர்வு பெற்று, மேயராக இந்திராணி, துணை மேயராக நாகராஜன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். தற்போது மேயர் இந்திராணி, முதல்வரைச் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார். அதுபோல் முக்கிய கவுன்சிலர்கள் சிலர் மண்டலத் தலைவர், நிலைக்குழுப் பதவிகளை கைப்பற்ற சென்னையில் முகாமிட்டிருக்கின்றனர். மேயர் மதுரை திரும்பி வந்ததும், மாநகராட்சி ஆணையாளர், திமுக மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 5 மண்டலத் தலைவர்களை அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் சிபாரிசு செய்யும் கவுன்சிலர்களுக்கு வழங்குவதற்கு திமுக கட்சித் தலைமை அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்த அடிப்படையில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர்கள் பொன்முத்துராமலிங்கம், தளபதி மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன் ஆகியோர் பரிந்துரையில் தலா ஒரு கவுன்சிலர்களுக்கு மண்டலத் தலைவர் பதவி வழங்கப்பட இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், கவுன்சிலருமான கார்த்திகேயன், மண்டலத் தலைவர் பதவி கேட்கிறார். அவருக்கு துணை மேயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு இருந்தநிலையில் சிபிஎம் கட்சிக்கு துணை மேயர் ஒதுக்கப்பட்டதால் அவர் ஏமாற்றமடைந்தார்.

தற்போது காங்கிரஸ் கட்சி கார்த்திகேயனுக்காக அவர் கவுன்சிலராக வெற்றிப்பெற்ற வடக்கு மண்டலத் தலைவர் பதவியை திமுக கூட்டணியில் கேட்கிறது. ஆனால், ஏற்கெனவே மேயர் பதவி கிடைக்காமல் ஏமாற்றமடைந்த முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கத்திற்கு அவரது மருமகள் அல்லது ஆதரவாளர் ஒருவருக்கு வடக்கு மண்டலத் தலைவர் பதவி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட இருக்கிறது. அதனால், அவரிடம் இருந்து வடக்கு மண்டலத் தலைவர் பதவியை பெற்று கார்த்திகேயனுக்கு வழங்க முடியாது. அதனால், இந்த முறையும் கார்த்திகேயன் மண்டலத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு மண்டலத்திலும் மேயர் கனவில் இருந்து கவுன்சிலர்கள், தற்போது அப்பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரையில் மண்டலத் தலைவர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், மேயர், துணை மேயர் பதவி போன்ற பெரிய பதவிகள் கிடைக்காமல் சாதாரண மண்டலத் தலைவர் பதவியை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விகுறியாக உள்ளது. அவர்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர் மற்றொரு நபருக்கு அப்பதவியை வழங்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், அதிருப்தி கவுன்சிலர்களை சமாதானப்படுத்தாத பட்சத்தில் அவர்களுக்கும், மேயருக்குமான மோதல் நீடிக்கும் என்றும், அதனால் மாநகராட்சி நிர்வாகப்பணிகள் பாதிக்கப்படும் எனவும் கருதப்படுவதால் சமரசப் பேச்சுவார்த்தை திமுகவில் நடக்கும் எனக் கூறப்படுகிறது. இதுதவிர 7 மாநகராட்சி நிலைக்குழு தலைவர் பதவிகளும் நியமிக்கப்படுகிறது. அப்பதவிகளை பிடிக்கும் திமுக கவுன்சிலர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மண்டலத் தலைவர்களுக்கு தனி அறைகள் ஏற்கெனவே தயார்நிலையில் உள்ளது. தற்போது மைய அலுவலகத்தில் நிலைக்குழு தலைவர்களுக்கு தனி அறைகள் புதுப்பொலிவுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிலைக்குழு தலைவருக்கும் தனித்தனி அறைகள் வழங்கப்பட இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x