Published : 08 Mar 2022 12:34 PM
Last Updated : 08 Mar 2022 12:34 PM

மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம்: நீட் விலக்கு மசோதாவின் நிலை என்ன? - ராமதாஸ்

கோப்புப் படம்

சென்னை: வரும் கல்வியாவிண்டுக்கு முன்பாக தமிழகத்திலிருந்து நீட் விலக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக ஆளுனநரால் திருப்பி அனுப்பப்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வரவு, தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்டு,
இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், அந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதை தமிழக ஆளுநர் ஒரு வாரத்தில் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்திருக்க முடியும். ஆனால், 142 நாட்களாக நீட் விலக்கு சட்டத்தை ஆய்வு செய்த ஆளுநர், அது
கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

பாமக-வின் யோசனைப்படி, நீட் விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி பிப்ரவரி 5ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவையை கூட்டி, நீட் விலக்கு சட்ட முன்வரைவை எந்தத் திருத்தமும் இல்லாமல் நிறைவேற்றி ஆளுனருக்கு மீண்டும் அனுப்பி வைத்தது.

தமிழக சட்டப்பேரவையில் முதலில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட முன்வரைவை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்காவது அதிகபட்சமாக ஒரு வாரம் தேவைப்படும். இப்போது அதே சட்ட முன்வரைவு தான் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டிருக்கிறது என்பதால்,
அதில் ஆய்வு செய்யவோ, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கவோ எதுவும் இல்லை. ஒரு சட்ட முன்வரைவை சட்டப்பேரவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர ஆளுனருக்கு வேறு வழியில்லை. அதனால், தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு கண்களை மூடிக் கொண்டு ஒப்புதல் அளித்து கையெழுத்து போடுவது தான் ஆளுனருக்கு உள்ள ஒரே வாய்ப்பு ஆகும்.

ஆனால், சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்ட முன்வரைவு மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்து விட்ட பிறகும் கூட அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். சட்டங்களுக்கு ஒப்புதல்
அளிப்பதற்கான ஆளுனரின் அதிகாரங்கள் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.

ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு சட்ட முன்வரைவு மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டால், அது பற்றி எந்த முடிவும் எடுக்காமல் தம்மிடமே வைத்துக் கொள்ள ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்று அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதை உணர்ந்து நீட் விலக்கு சட்டத்திற்கு
ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், கால சூழலை புரிந்து ஆளுநர் செயல்பட வேண்டும். 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு அட்டவணை எந்த நேரமும் அறிவிக்கப்படாலாம். அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நீட் விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் அவரது பாதுகாப்பிலேயே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

மற்றொருபுறம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்துக்கு ஆளுனரின் ஒப்புதலை பெறும் விஷயத்தில் தமிழக அரசும் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதது கவலையளிக்கிறது. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் இரண்டாவது முறையாகவும் ஆளுநர் தாமதிக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஆளுனரை சந்தித்து நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யவில்லை.

நீட் தேர்வு மாணவர்கொல்லி தேர்வு என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். கடந்த இரு ஆண்டுகளாக, நீட் தேர்வு அச்சம் மற்றும் தோல்வியால் ஒவ்வொரு ஆண்டும் 10 பேருக்கும் மேலாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த ஆண்டும் நீட் தற்கொலைகள் தொடர் கதையாகி விடக்கூடாது.

அதனால், தமிழக ஆளுநர் உடனடியாக நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைக்காவிட்டால், ஆளுனரை முதல்வர் நேரில் சந்தித்து, இதற்காக வலியுறுத்த வேண்டும். அதன்பின் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வரும் கல்வியாவிண்டுக்கு முன்பாக தமிழகத்திலிருந்து நீட் விலக்கப்பட வேண்டும்; மாணவர்களின் தற்கொலைகளுக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும்." என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x