Published : 22 Apr 2016 08:17 AM
Last Updated : 22 Apr 2016 08:17 AM
சென்னை ஓட்டேரி சத்தியவாணி முத்து நகரில் முதல்வர் ஜெய லலிதா மார்ச் 1-ம் தேதி திறந்து வைத்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சாரம், குடிநீர் வசதி செய்து தராததால் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிக்க குடியிருப்பு வாசிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை திரு.வி.க. நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி சத்தியவாணிமுத்து நகரில் 1973-ல் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பழுதடைந்ததால் அவற்றை இடித்துவிட்டு, 392 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.34 கோடியில் கட்டப்பட்டன. இதனை மார்ச் 1-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி முறையில் திறந்துவைத்தார்.
பின்னர், அங்கே ஏற்கெனவே குடியிருந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அங்கு யாரும் வசிக்க முடியாத நிலை உள்ளது. அதுகுறித்து வீடு ஒதுக்கீடு பெற்ற பூ வியாபாரிகள் உஷா, கருமாரி, வீட்டு வேலை செய்யும் சித்ரா, மாவு வியாபாரி முத்துலட்சுமி, காகிதம் பொறுக்கும் வேலை செய்யும் அல்லி ஆகியோர் கூறும்போது, “2013-ல் ரூ.8 ஆயிரம் கொடுத்து எங்களை இங்கிருந்து வெளியேற்றினர். 18 மாதங்களில் புதிய வீடு கட்டித் தருவோம் என்றார்கள். ஆனால், 3 ஆண்டுகள் கழித்துத்தான் கொடுத்தனர். வாடகை வீட்டில் வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறோம். புதிய வீடு கொடுத்துவிட்டார்களே என்று நம்பி, வாடகை வீட்டை காலி செய்வதாகக் கூறிவிட்டோம். இங்கு வந்து பார்த்தால் மின்சாரம், குடிநீர் வசதி இல்லை. இங்கே வசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், இருக்கின்ற வாடகை வீட்டில் இருந்தும் விரட்டப்பட்டுவிடுவோமோ என்று அச்சமாக இருக்கிறது. சில நாட்களில் மின்சாரம், குடிநீர் வசதி செய்து தராவிட்டால் மறியல் போராட்டம் நடத்துவதுடன் இந்த தேர்தலையும் புறக்கணிப்போம்” என்று ஆதங்கத்துடன் கூறினர்.
வீடு ஒதுக்கீடு பெற்ற பெயின்டர் சுரேஷ், பெட்டிக் கடைக்காரர் டி.குட்டி, ஆட்டோ டிரைவர் பி.அசோக்குமார், கூலி வேலை செய்யும் டி.கார்த்திக் ஆகியோர் கூறும்போது, “இங்கிருந்து வீட்டைக் காலி செய்த பலர் பெரம்பூர், கெல்லீஸ், ஏகாந்திபுரம், ஆவடி, அம்பத்தூர், சூளை, வில்லிவாக்கம் போன்ற இடங்களில் வசிக்கிறார்கள். வேறு சிலர் புதிய குடியிருப்பு அருகே தகரக் கொட்டகை அமைத்து வசிக்கின்றனர். புதிய குடியிருப்பில் வீடு ஒதுக்கிய பிறகும் அங்கு போய் வசிக்க முடியாமல், கொளுத்தும் வெயிலில் தகரக் கொட்டகையில் அவதிப்படுகிறோம். மின்சாரம், குடிநீர் வசதி பற்றி அதிகாரிகளிடம் கேட்டால் 2 நாட்களில் வந்துவிடும் என பல தடவை கூறியதோடு சரி. திரு.வி.க.நகர் தொகுதி எம்.எல்.ஏ. நீலகண்டன் இந்தப் பக்கமே வரவில்லை. யார் ஓட்டுக் கேட்டு வந்தாலும் உள்ளே விடமாட்டோம். எங்களது அவல நிலையை யாரும் கண்டுகொள்ளாத தால் வேறு வழியில்லாமல் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்” என்றனர்.
இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, “புதிய குடியிருப்புகளுக்கு மின்சாரம், குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்கான பணிகள் நடக் கின்றன” என்று மட்டும் கூறி னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT