Published : 08 Mar 2022 05:48 AM
Last Updated : 08 Mar 2022 05:48 AM
சென்னை: அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு, ஏக்கம் நிச்சயம் நிறைவேறும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருச்செந்தூரில் சசிகலாவைச் சந்தித்ததற்காக ஓபிஎஸ்-ஸின் சகோதரர் ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மாவட்டங்களுக்கு நான்மேற்கொண்டது ஆன்மிகப் பயணமாக இருந்தாலும், அந்தந்த மாவட்ட மக்கள் எனக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து, எல்லையற்ற மகிழ்ச்சியில் என்னை திக்குமுக்காடச் செய்துள்ளனர். அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
உங்களுடைய எதிர்பார்ப்பு,ஏக்கங்களை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. அதேபோல், ‘நம் இயக்கத்தை காப்பாற்றிட வேண்டும்’ என்ற முழக்கத்தை எழுப்புகிறீர்கள். நீங்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகாத வகையில், உங்கள் அனைவருக்காகவும், தமிழக மக்களுக்காகவும் என் எஞ்சியுள்ள வாழ்நாட்களை அர்ப்பணித்து, நிச்சயம் நிறைவேற்றுவேன்.
எத்தகைய சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து, கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக உறுதியோடு இருந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் கட்சியைக் காப்போம். மக்களாட்சியை மீண் டும் அமைப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...