Published : 08 Mar 2022 05:53 AM
Last Updated : 08 Mar 2022 05:53 AM
சென்னை: சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனது ஆட்சியை இழந்தது. முன்னதாக, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்தது. அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் பிரிந்து தனிக்கட்சி தொடங்கியதாலும், சசிகலா இல்லாததாலும்தான் அதிமுகவுக்கு பெரிய தோல்வி ஏற்படுவதாக ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.
இதனால், ஒற்றை தலைமைக்காக அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்று குரல் அவ்வப்போது எழுகிறது. இந்த நிலையில், ஓபிஎஸ் பங்கேற்ற தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா, தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது கட்சிக்குள் இருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கட்சி நிர்வாகிகள் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து ஓபிஎஸ், இபிஎஸ் இன்னும் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்த சர்ச்சை சற்று அடங்கியநிலையில், தேனி மாவட்ட ஆவின் தலைவரும், ஓபிஎஸ் சகோதரருமான ஓ.ராஜா திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்துப் பேசினார். ஓபிஎஸ்ஸின் தூதுவராகத்தான் ராஜா சென்றார் என சர்ச்சை வெடித்த நிலையில், மறுநாளே அவரை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவிட்டனர்.
இருந்தபோதிலும், அதிமுகவில் இணைவது குறித்து சசிகலா, தினகரன் தொடர்ந்து அறிக்கை வெளியிடுவது, செய்தியாளர்களை சந்திப்பது, ஓபிஎஸ், இபிஎஸ் தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை போன்ற நடவடிக்கைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற விதியின்படி, மார்ச் மாதத்துக்குள் அதிமுக தனது பொதுக்குழுவைக் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “ தேர்தல் ஆணையம் வகுத்த விதிகளின்படி அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்டநேரம் வந்துவிட்டது. இதை தள்ளிப்போட வேண்டாம் என்று ஓபிஎஸ், இபிஎஸ்முடிவு செய்துள்ளனர். அதன்படி, மார்ச்இறுதிக்குள் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அதேபோல, உட்கட்சித் தேர்தலுக்கான முதல் பகுதியாக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதுதவிர ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான நிர்வாகிகள் தேர்தலை நடத்துவது குறித்து பொதுக்குழுவில் பேசப்படும். மேலும், சசிகலாதொடர்பாக இந்த பொதுக் குழுவில்முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது” என்றனர்.
தேனி மாவட்ட அதிமுக நிறைவேற்றிய தீர்மானத்தை இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலா தொடர்பாக இந்த பொதுக் குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT