Published : 08 Mar 2022 06:19 AM
Last Updated : 08 Mar 2022 06:19 AM
சென்னை: நாடு முழுவதும் 6 ஆண்டுகளாக அங்கீகாரத்தை புதுப்பிக்காத 97 கல்லூரிகளை மூடுமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 6 கல்லூரிகள் மூடப்பட உள்ளன.
இந்தியாவில் ஏஐசிடிஇன்கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டகல்வி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கல்லூரிகள் ஏஐசிடிஇ வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆண்டுதோறும் தங்களது அங்கீகாரத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அந்தப் படிப்புகள் ஏஐசிடிஇ-யால் அங்கீகாரமற்றவையாகவே கருதப்படும். மேலும், மாணவர்களின் வேலைவாய்ப்பு, உயர் கல்வியில் சிக்கல் ஏற்படும்.
இந்நிலையில், சமீபகாலமாக கணிசமான கல்லூரிகள் முறையான அனுமதி பெறாமல் இயங்குவதாகவும், பகுதிநேர அங்கீகாரம் பெற்று முழுநேர படிப்புகளைக் கற்றுத் தருவதாகவும் ஏஐசிடிஇக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, இனி பகுதிநேர படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று ஏஐசிடிஇ அண்மையில் அறிவித்தது.
மேலும், முதுநிலை மேலாண் பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு முன்னர், அதற்கான அனுமதியை கல்வி நிறுவனங்கள் பெற வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டது.
தொடர்ந்து, நாடு முழுவதும் நீண்டகாலமாக அங்கீகாரம் புதுப்பிக்காமல் செயல்பட்டு வரும் 97 கல்லூரிகளை மூடுவதாகவும் ஏஐசிடிஇ தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றில் 6 அரசு, 2 அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களும் அடங்கும். தமிழகத்தில் மட்டும் 6 தனியார் கல்லூரிகள் மூடப்பட உள்ளன.
இதுதொடர்பாக ஏஐசிடிஇ ஆலோசகர் (கல்லூரி அங்கீகாரப் பிரிவு) ராஜேந்திர பி.காக்டே, அனைத்து மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏஐசிடிஇ 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான வழிகாட்டுக் கையேட்டில் குறிப்பிட்டுஉள்ளவாறு, கல்வி நிறுவனங்கள் உரிய காலத்துக்குள் தங்கள் அங்கீகாரத்தைப் புதுப்பித்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கல்லூரிகள் அங்கீகாரத்தை 6 ஆண்டுகளாகப் புதுப்பிக்காமல் இருப்பின், அவற்றை செயல்படாதவையாக கருதி மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், அந்தக் கல்லூரி மீண்டும் புதிய கல்வி நிறுவனமாக விண்ணப்பித்து, தங்களது பணியைதொடர வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி நாடு முழுவதும் 6 ஆண்டுகளாக அங்கீகாரம் நீட்டிப்பு செய்யாத 97 கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், 15 நாட்களுக்குள் கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐசிடிஇ உத்தரவால் மூடப்பட உள்ள கல்லூரிகளின் பட்டியல் https://www.aicte-india.org என்ற https://www.aicte-india.orgஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT