Published : 08 Mar 2022 04:15 AM
Last Updated : 08 Mar 2022 04:15 AM
தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டியில் வகுப்பறையுடன் கூடிய ஸ்மார்ட் அங்கன்வாடி மையத்தை மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேற்கு ஊராட்சி தோழகிரிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்துக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த 47 குழந்தைகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.40 லட்சம் செலவில் இந்த அங்கன்வாடி மையத்தில் வகுப்பறையுடன் கூடிய புதிய ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
இதில், தனியார் நர்சரி பள்ளிகளில் உள்ளது போன்று குழந்தைகளுக்கான செயல்வழி கற்றல் திறனை அதிகரிக்க தேவையான உபகரணங்கள், தமிழ்- ஆங்கில எழுத்துக்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிய படங்களுடன் கூடிய பொருட்கள் உள்ளன. மேலும் புரஜெக்டர் அமைக்கப்பட்டு அதில் கதைகள், பாட்டுகள், குழந்தைகளின் உச்சரிப்புகளை மேம்படுத்தும் பயிற்சிகள் திரையில் ஒளிபரப்பப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தொடக்க பள்ளியில் புதிய நூலகம்
அதேபோல, தோழகிரிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 116 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தனி கட்டிடத்தில் ஆயிரம் புத்தகங்கள் கொண்ட ‘அகரம் நூலகம்' என்ற புதிய நூலகம் ரூ.3.22 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தோழகிரிப்பட்டியில் உள்ள ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் மற்றும் அகரம் நூலகத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
இதில், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது: தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஊரகப்பகுதியில் ஸ்மார்ட் அங்கன்வாடி மையத்தை, மாவட்ட ஆட்சியர் மிகுந்த அக்கறையுடன் உருவாக்கியுள்ளார். இதேபோல, பிற மாவட்டங்களிலும் ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களை உருவாக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மார்ச் 8-ம் தேதி (இன்று) நடைபெறவுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் விவாதித்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்தி மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment