Published : 07 Mar 2022 09:16 PM
Last Updated : 07 Mar 2022 09:16 PM
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு உலகப் போர் காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்குக் குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை அருங்காட்சியமாக மாற்ற கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
மதுரையில் உள்ள பழமைவாய்ந்த அமெரிக்கன் கல்லூரிகளில் ஒன்றாக அமெரிக்கன் கல்லூரி திகழ்கிறது. இந்த கல்லூரி 1881-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆரம்பத்தில் மதுரை பசுமலை பகுதியில் செயல்பட்டது. அதன்பின் 1909-ஆம் ஆண்டு மதுரை கோரிப்பாளையத்திற்கு இடமாற்றம் செய்து அங்கிருந்து செயல்பட தொடங்கியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கன் மிஷினரி மூலமாக அடுத்தடுத்து புதிய கட்டிட்டங்கள் கட்டப்பட்டு தற்போது மதுரையின் முக்கியமான கல்லூரிகளில் ஒன்றாக இந்த கல்லூரி விளங்குகிறது.
தற்போது வெற்றிகரமாக 111 ஆண்டுகளைக் கடந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படிக்கின்றனர். இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் தமிழ் சினிமா துறையில் முக்கிய இயக்குநராகவும், நடிர்களாகவும் உள்ளனர். மேலும், பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இந்தக் கல்லூரி முழுவதிலுமே பிரிட்டிஷ் காலத்தில் கட்டபட்ட பழங்கால கட்டிடங்களிலேயே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்கன் கல்லூரியில் 1912-ல் கட்டப்பட்ட ஜேம்ஸ் ஹால் அரங்கில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ் உள்ள ஓர் அறையில் பல ஆண்டுகளாக பழைய பொருட்களை சேகரித்துவைக்கும் பகுதியாக இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் அந்த அறையை சுத்தம் செய்ய கல்லூரி நிர்வாகம் சுத்தம் செய்தபோது கட்டிடத்தின் கீழ் இருந்த அறையானது பதுங்குக் குழி போன்ற அமைப்பில் இருந்து தெரிய வந்தது. அதில் ஒரு நுழைவு பகுதியும், அதில் இருந்து வெளியேற 4 வழிகளும் இருந்துள்ளது. அதனால், வரலாற்று ஆய்வாளர்களை அழைத்துவந்து அந்தக் கட்டிடப் பகுதிகளை ஆய்வு செய்தபோது அது பதுங்குக் குழி என்பது தெரியவந்துள்ளது.
கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோர் கூறியது: ”சுத்தம் செய்த அந்த பழைய காலத்து கட்டிடத்திற்குக் கீழே உள்ளே ஒரு பாதை, வெளியே ஒரு பாதை இருந்ததால் அது கண்டிப்பாக பதுங்குக் குழியாகதான் இருக்கும் என்று நினைத்தோம். அதுபோல், அது பதுங்குக் குழியாக இருந்தது. 1914-18 காலகட்டத்தில் நடைபெற்ற முதலாம் உலகப்போருக்கான பதற்ற கால கட்டமான 1912 காலங்களில் கட்டப்படும் கட்டிடங்களில் மக்களை பாதுகாப்பதற்காக பதுங்குக் குழிகள் அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் அமெரிக்க மிஷனரிகளால் கட்டப்பட்ட கல்வி நிறுவனம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் இந்தப் பதுங்குக் குழி இந்த பதுங்குக் குழியானது 3 அறைகளைக் கொண்டதாகவும், பிரமாண்ட கல்தூண்களுடன் 32 அடி உயர கட்டிடத்தைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் நியூகர்சல் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட இரும்பு தடவாளங்கள் பயன்படுத்தபட்டு இந்தப் பதுங்குக் குழி அமைக்கப்பட்டுள்ளது.
பாம்பன் ரயில்வே பாலத்தில் பயன்படுத்தபட்டுள்ள இதே இரும்பு தடவாளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பதுங்குக் குழி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அந்த பதுங்குக் குழியில் பழமையான ஓலைச்சுவடி, நாணயம் மற்றும் மரங்களின் ஆயுட்காலம், மனித எலும்புக்கூடு ஆகியவற்றை வைத்து அருங்காட்சியகமாக மாற்றும் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். விரைவில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment