Published : 07 Mar 2022 07:52 PM
Last Updated : 07 Mar 2022 07:52 PM
மதுரை: ’தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, மேயராக பொறுப்பேற்ற இந்திராணி ஏன் வரவேற்க வரவில்லை?’ என்ற கேள்வி, திமுகவினர் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சியின் மேயராக 57-வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராணி கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிபாரிசால் இவர் இந்தப் பதவிக்கு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேயராக பொறுப்பேற்றபோது நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வரும் வரை 2 மணி நேரம் காத்திருந்து மேயராக பொறுப்பேற்றார்.
திமுகவின் மேயர் வேட்பாளர் தேர்வில் மாநகர செயலாளர்கள் தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், புறநகர் மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் சிபாரிசு எடுபடாததால், அவர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும், மேயர் பதவியேற்பு விழாவுக்கு மேயர் தரப்பில் இருந்து அவர்களுக்கு முறையான அழைப்பு செல்லாததால், அவர்கள் பதவியேற்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்தாக கூறப்படுகிறது.
மேயர் வேட்பாளர் தேர்வில் இருந்து மாநகர திமுக, புறநகர் திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும், மேயர் இந்திராணி தரப்பினருக்கும் இடையே உட்கட்சி பூசல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. மேலும், அவர்கள் எதிரெதிர் துருவங்களாக செயல்பட தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மதுரை திமுகவின் இந்த உட்கட்சிப்பூசல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு வந்தபோது பட்டவர்த்தனமாக தெரிந்தது.
அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், கோ.தளபதி, மணிமாறன், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் வேலுச்சாமி, குழந்தைவேலு, மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டவர்கள், விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர். ஆனால், புதிதாக மதுரை மேயராக பொறுப்பேற்ற மேயர் இந்திராணி மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கவில்லை. அவர் நிதியமைச்சர் வராதததால் வரவில்லையா அல்லது அவருக்கு முதல்வர் மதுரை விமான நிலையத்திற்கு வரும் நேரத்தை மாவட்டச் செயலாளர்கள் யாரும் தெரியவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால், துணை மேயர் நாகராஜன் சென்றிருக்கும்போது அவர் மேயருக்கு தகவல் கூறியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், அப்படியிருந்தும் மேயராக பதவியேற்ற நிலையில் முதல் முறையாக மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்க ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து மேயர் இந்திராணி தரப்பில் விசாரித்தபோது, ‘‘தொடர் பிரச்சாரம், பதவியேற்பு விழா, அடுத்தடுத்து தொடர் நிகழ்ச்சிகளால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதன் காரணமாகவே அவர் அங்கு வரவில்லை. முதல்வரை சந்திக்க நாளை நாங்கள் சென்னை செல்கிறோம்’’ என்றனர்.
ஆனால், மேயர் முழுக்க நிதியமைச்சர் ஆதரவாளராக தன்னை வெளிப்படையாக காட்டிக்கொண்டதாலே அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மாவட்டச் செயலாளர்கள், முதல்வர் ஸ்டாலின் வந்த தகவலை அவருக்கு தெரிவிக்கவில்லை என்று கட்சியினர் பேசிக் கொள்கின்றனர். மேலும், மேயராக இந்திராணி பதவியேற்றவுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும், அதில் ”எனது பணி முழுவதும் நிதியமைச்சரின் வழிகாட்டுதலின் படியும் மேற்பார்வையில் மட்டுமே நடைபெறும்’’ எனக் கூறியிருந்ததும் திமுகவின் மற்ற நிர்வாகிகளை எரிச்சலையடைய செய்ததாக கூறப்படுகிறது.
மேயர் தேர்தல் முடிந்தாதும், அதன் பின்னணியிலான உட்கட்சி மோதல் மதுரை மாவட்ட திமுகவில் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT