Published : 07 Mar 2022 05:57 PM
Last Updated : 07 Mar 2022 05:57 PM
சென்னை: காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட உடனடியாகத் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் இங்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறது. கர்நாடக அரசின் இந்த சட்டவிரோதப் போக்குக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில், காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட உடனடியாகத் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இங்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
காவிரி நடுவர்மன்றமும், உச்ச நீதிமன்றமும் காவிரியின் குறுக்கே எந்தவொரு அணையும் கட்டப்படக்கூடாது. அவ்வாறு கட்டுவதாக இருந்தால் தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடக அரசு பெறவேண்டும் எனத் தெளிவாகக் கூறியுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதித்து கருத்தொற்றுமை ஏற்பட்டால் அன்றி எந்த ஒரு மாநிலமும் காவிரியின் குறுக்கே அணையைக் கட்ட முடியாது.
அப்படியிருக்கும் போது மேகேதாட்டுவில் 66டிஎம்சி தண்ணீரைத் தேக்குவதற்கு சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை ஒன்றைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்து இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதற்கென 1000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கடந்த மார்ச் 5 ஆம் நாளன்று பெங்களூருவில் பேசும்போது ''இந்த ஆண்டு முதல் புதிய மேகேதாட்டு திட்டம் தொடங்கும்'' என அறிவித்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மோடி அரசின் அப்பட்டமான தமிழர் விரோத நிலைபாட்டையே காட்டுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கர்நாடக அரசு மதிக்காததில் வியப்பேதும் இல்லை. ஆனால், காவிரிப் பிரச்சனையில் நடுநிலை வகிக்கவேண்டிய ஒன்றிய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவளிப்பது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.
காவிரிப் பிரச்சினையில் அதிமுக அரசு திறமை வாய்ந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாமல் போனதால்தான் காவிரி நடுவர் மன்றம் நமக்கு ஒதுக்கிய தண்ணீரில் 14.75 டிஎம்சி-ஐ நாம் இழக்க நேரிட்டது. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதில் முனைப்பாக இருக்கும் திமுக தலைமையிலான இந்த அரசு அப்படி மெத்தனமாக இருந்துவிடாது என நம்புகிறோம். உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம். காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தின் ஒருமித்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இங்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...