Published : 07 Mar 2022 05:44 PM
Last Updated : 07 Mar 2022 05:44 PM
புதுச்சேரி: ’கடந்த 1999-ஆம் ஆண்டு 2 எம்எல்ஏக்களில் இருந்து கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்தது எப்படி’ என்று புதுச்சேரி பாஜக நிர்வாகிகளிடம் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா விவரித்தார்.
புதுச்சேரி மாநில பாஜகவின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பங்கேற்று பேசும்போது, "கடந்த 1999-ல் பெங்களூரில் பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள்தான் கிடைத்தனர். அப்போதெல்லாம் கட்சிப்பணி செய்ய நிர்வாகிகள் இல்லை. பலரும் கட்சிப் பணிக்கு முன்வரமாட்டார்கள். நாமே தேடிச்செல்லும் நிலை இருந்தது. ஆனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தியதால் ஆட்சியை பிடித்தோம்.
குறிப்பாக, நேரடியாக கட்சிப்பணி செய்ய பலர் முன்வந்தாலும், மருத்துவம், கணக்கு தணிக்கையாளர் உட்பட பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் கட்சி பணிக்கு நேரடியாக வரமாட்டார்கள். ஆனால் அவர்கள் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பார்கள். அவர்களையும் நம் கட்சியில் இணைத்து செயல்பட வைக்க வேண்டும். அதற்காகத்தான் பல்வேறு பிரிவுகளில் அணிகள் இயங்கும். தற்போது அதிகபட்சமாக 24 பிரிவுகள் இயங்குகின்றன. இந்தப் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் வழங்க கூட்டத்தை நடத்துகிறோம். நம்பிக்கையோடு செயல்படுபவர்களுக்கு உரிய மரியாதையை கட்சி வழங்கும்" என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், "புதுவையில் பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சி தனி நபரால் ஏற்பட்டதல்ல. நாம் அனைவரும் இணைந்து பணியாற்றியதாலும், மேலிட வழிகாட்டுதலாலும் கிடைத்தது. இந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை. இப்போது 12 எம்எல்ஏக்களைத்தான் பெற்றுள்ளோம். இன்னும் பல தொகுதிகளில் நாம் காலூன்றி வெற்றி பெற வேண்டும். கட்சி வளர்ச்சியடைந்தால் அனைவருக்கும் பொறுப்பு கிடைக்கும். நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதை எதிர்கொள்ள பாஜகவினர் தயாராக இருக்க வேண்டும். 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதில் புதுவையில் நாம் வெற்றி பெற வேண்டும். கட்சியை கீழ்மட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. கட்சி நாம் அனைவருக்கும் பொதுவானது. இதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர் சாய் சரவணன் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT