Published : 07 Mar 2022 07:30 AM
Last Updated : 07 Mar 2022 07:30 AM

15,000 பேர் இந்தியா திரும்பியுள்ளனர்; உக்ரைனில் பயிலும் அனைத்து மாணவர்களும் நிச்சயம் மீட்கப்படுவர்: எல்.முருகன் உறுதி

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் மக்கள் மருந்தகம் மூலம் நடைபெறும் ஒரு வார சிறப்பு மருத்துவ முகாமைப்பார்வையிட்ட மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள் மூலம் மார்ச் 1 முதல் 7-ம் தேதி வரை வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஏழைகளுக்கு தரமான மருந்துகள், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே இந்த மருந்தகங்களின் நோக்கம்.

நாடு முழுவதும் 8,675 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பிரதமரின் வீட்டு வசதி திட்டம் , தனிநபர் கழிப்பறை, இலவச எரிவாயு இணைப்பு, ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் தமிழகத்தில்தான் அதிக அளவில் செயல்படுத்தப்படுகின்றன.

உக்ரைனில் இருந்து இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா வந்துள்ளனர். தினமும் 3 ஆயிரத்தில் இருந்து 4,000 மாணவர்கள் இந்தியா வருகின்றனர்.

போர் நடைபெறும் சூழலில் 4 மூத்தஅமைச்சர்கள், கடும் பனியிலும் உக்ரைனில் களத்தில் உள்ளனர். அங்குள்ள மாணவர்கள் பேருந்து, ரயில் மூலம் எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்படுகின்றனர். இந்தியாவில் சொந்த ஊருக்குச் செல்லும் வரை தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழக அரசு தனியாக மீட்புக் குழு அமைத்துள்ளது. அந்தக் குழுவை அனுப்பி, மாணவர்களை மீட்டு வரச் சொல்லுங்கள்? உக்ரைனில் இருந்து அனைத்து மாணவர்களும் மீட்கப்படுவர்.

பெரும்பாலும் எல்லா படிப்புகளுக்கும் தகுதித் தேர்வு இருக்கிறது. அதேபோலத்தான் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு வந்தபின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்மூலம் அதிக அளவிலான ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். மாணவர்களை சர்வதேச தரத்துக்கு தரம் உயர்த்த நீட் தேர்வு அவசியம்.

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டதால், கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உரிய தீர்வு காணப்படும்.

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் சாத்தியம் என்பதாலேயே, அதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்கள் விளக்க அறிக்கை தந்தவுடன், மத்தியஅரசு திட்டத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x