Last Updated : 06 Mar, 2022 06:50 PM

 

Published : 06 Mar 2022 06:50 PM
Last Updated : 06 Mar 2022 06:50 PM

வாகன உரிமையாளர் உயிரிழந்தால் எளிதாக பெயர் மாற்றம்: ஆர்டிஓ பதிவில் வாரிசை தெரிவிக்கும் வசதி அறிமுகம்

பிரதிநிதித்துவப் படம்.

கோவை: வாகனத்தின் உரிமையாளர் உயிரிழந்துவிட்டால் எளிதாக பெயர் மாற்றும் வகையில் வாகன பதிவின்போதே நாமினியை தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்பு வாகனத்தின் உரிமையாளர் திடீரென இறந்துவிட்டால், இறந்தவரின் இறப்புச் சான்று, வாரிசு சான்று ஆகியவற்றைப் பெற்று, வாரிசுகள் அனைவரும் தொடர்புடைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு (ஆர்டிஓ) நேரில் சென்று கையெழுத்திட வேண்டும். பின்பு, யாராவது ஒருவரின் பெயருக்கு மாற்ற எழுத்துப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்த பிறகே உரிமையாளரின் பெயரை மாற்ற முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த சிக்கலான நடைமுறையால் பல வாகனங்கள் இறந்தவர்களின் பெயர்களிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. மோட்டார் வாகன சட்டப்படி ஒருவர் உயிரிழந்து 90 நாட்களுக்குள் வாகன உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்யவில்லையெனில், காப்பீடு கிடைக்காது. பெயர் மாற்றாமலேயே இயங்கும் வாகனம், ஒருவேளை யார் மீதாவது மோதி விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் மூன்றாவது நபருக்கு இழப்பீடு கிடைக்காது.

இந்த பிரச்சினையைத் தவிர்க்க 2021 ஏப்ரல் 8-ம் தேதி மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வாகன பதிவை மேற்கொள்ளும் மென்பொருளில் இதற்கான வசதி ஏற்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், அந்த வசதி தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக பொதுமக்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் உள்ளனர். போக்குவரத்து துறை அலுவலர்களில் பலருக்குமே இதுபோன்ற வசதி இருப்பது தெரியவில்லை.

மென்பொருளில் மட்டுமே இருக்கும்

இதுதொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிலர் கூறும்போது, ''தற்போதைய நடைமுறைப்படி புதிய வாகன உரிமையாளர் தெரிவிக்கும் நாமினியின் (வாரிசு) பெயர் வாகன பதிவுச் சான்றில் (ஆர்.சி) இடம்பெறாது. ஆனால், வாகனப் பதிவு நடைபெறும் மென்பொருளில் அந்த விவரம் இருக்கும்.

எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது அந்த விவரம் பயன்படுத்தப்படும். பழைய வாகனங்களை வைத்துள்ளவர்கள், அந்த வாகன பதிவுச் சான்றில் பெயர் மாற்றம் செய்வது, முகவரி மாற்றம் போன்றவற்றை மேற்கொள்ள ஆர்டிஓ அலுவலகம் வரும்போது நாமினியை பதிவு செய்துகொள்ளலாம்'' என்றனர்.

கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன் கூறும்போது, ''பழைய வாகனங்கள் அனைத்துக்கும் வாரிசை தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும், எப்போது வேண்டுமானாலும் நாமினியை மாற்றும் வசதியையும் மென்பொருளில் அளிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால சிக்கல்களை தவிர்க்க முடியும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x