Published : 06 Mar 2022 01:44 PM
Last Updated : 06 Mar 2022 01:44 PM

தனியார் நிதி நிறுவனம் அவமதித்ததால் விவசாயி தற்கொலை; குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தனியார் நிதி நிறுவனம் அவமதித்ததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தேவனூரில் டிராக்டர் கடன் தவணை செலுத்தத் தவறியதாக கூறி தனியார் நிதிநிறுவன அதிகாரிகள் அவமதித்ததால், சின்னத்துரை என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் தந்தை லட்சுமணன் மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கலும், அனுதாபங்களும்.

இரு டிராக்டர்களை வாங்குவதற்காக சகோதரர்களுடன் சேர்ந்து ரூ.6 லட்சம் கடன் பெற்ற சின்னத்துரை, அதில் ரூ. 4 லட்சத்தை செலுத்தி விட்டார். சில தவணைகள் மட்டும் செலுத்தாத நிலையில், அவரது வீட்டுக்கு வந்த நிதிநிறுவன அதிகாரிகள் அவரைத் திட்டி அவமதித்தது தான் தற்கொலைக்கு காரணம் ஆகும்.

கடன் தவணை செலுத்தாத சூழலில் நிதிநிறுவனம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் குண்டர்களை அனுப்பி மிரட்டியதும், டிராக்டரை பறித்துச் சென்றதும் மன்னிக்க முடியாத குற்றங்கள். இதற்கு காரணமான நிதிநிறுவன அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயி சின்னத்துரை குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இனியும் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடாத அளவுக்கு தனியார் நிதிநிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x