Published : 06 Mar 2022 01:16 PM
Last Updated : 06 Mar 2022 01:16 PM
சென்னை:மேகேதாட்டு அணை திட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆதரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று உறுதியாக நம்புவதாகவும், அது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். மேகேதாட்டு அணை விவகாரத்தில் நீதிபதியாக செயல்பட வேண்டிய ஷெகாவத் கர்நாடக வழக்கறிஞராக மாறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பான வினாக்களுக்கு விடையளித்த அவர்,‘‘மேகேதாட்டு அணை விவகாரத்தை மத்திய அரசால் தீர்க்க முடியாது. ஆனால், மேகேதாட்டு அணை கட்டப்பட வேண்டும் என விரும்புகிறேன். மேகேதாட்டு சிக்கல் குறித்து இந்த ஆண்டிலிருந்து இரு மாநிலங்களும் பேச்சு நடத்தத் தொடங்கினால், நிச்சயமாக மேகேதாட்டு அணை சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்’’என்று கூறியுள்ளார். இரு மாநிலங்களுக்கும் இடையிலான பேச்சுக்களுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாகவும் கஜேந்திர சிங் தெரிவித்தார்.
மேகேதாட்டு அணை சிக்கல் தொடர்பான மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தின் கருத்துகள் தேவையற்றவை. மேகேதாட்டு அணை சிக்கலுக்கான தீர்வு அங்கு அணை கட்டுவது அல்ல; மாறாக, அங்கு சட்டவிரோதமாக அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டக்கூடாது என்பதை உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் அவற்றின் தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கின்றன. அதன்படி மத்திய அரசு நடந்தாலே போதுமானது. அதுவே சிக்கலைத் தீர்த்து விடும்.
ஆனால், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொண்டிருப்பதாகவோ, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அம்மாநில அரசுக்கு சாதகமாக பேசுவதைப் போன்றோ தோன்றுகிறது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படுவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு என்பது போலவும், அதை நோக்கித் தான் இருதரப்பு பேச்சுக்கள் அமைய வேண்டும் என்பதைப் போலவும் மத்திய அமைச்சரின் பேச்சுக்கள் அமைந்துள்ளன. இது தவறானது. நடுநிலையாக செயல்பட வேண்டிய அவர், கர்நாடகத்துக்கு ஆதரவாக பேசக்கூடாது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது; இந்நிலைப்பாட்டை ஷெகாவத் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சராக உமாபாரதி இருந்த போது, மேகேதாட்டு அணை விவகாரத்தில் மிகத் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கர்நாடகம் கட்ட முடியாது என்பது தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. அதனால், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விண்ணப்பம் கர்நாடகத்திடமிருந்து வந்தால் அது திருப்பி அனுப்பப்படும் என்பது தான் உமாபாரதியின் நிலைப்பாடாக இருந்தது. 09.06.2015 அன்று அவர் எனக்கு எழுதிய அலுவல் ரீதியான கடிதத்தில் மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை அவர் விளக்கியிருந்தார். அதே நிலைப்பாடு தான் நீடிக்க வேண்டும்.
மேகேதாட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் மிகத் தெளிவாக உள்ளன. உச்சநீதிமன்றத்தில் இப்போது நிலுவையில் உள்ள வழக்கிலும் தமிழகத்திற்கு சாதகமாகவே தீர்ப்பு கிடைக்கும். இத்தகைய சூழலில் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தினால், அது தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதற்கு தான் வழி வகுக்கும். எனவே, மேகேதாட்டு விவகாரம் குறித்து இருதரப்பு பேச்சு நடத்துவதற்கான அழைப்பு மத்திய அரசிடமிருந்து வந்தாலும் கூட அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது. மேகேதாட்டு அணை விவகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் மூலமாக மட்டுமே தீர்வு என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...