Published : 06 Mar 2022 06:30 AM
Last Updated : 06 Mar 2022 06:30 AM

வேலூர் சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள்? - மோப்ப நாய்களுடன் காவல் துறையினர் சோதனை

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் நேற்று திடீர் சோதனை நடத்திவிட்டு வெளியே வந்த மாவட்ட காவல் துறையினர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் ஆண்கள், பெண்கள் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா? என மாவட்ட காவல் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் நடத்திய சோதனையில் பெரியளவில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

வேலூர் தொரப்பாடி பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மத்திய சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதாவது பயன்பாட்டில் உள்ளதா? என அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் திடீர் சோதனை நடத்த சிறை நிர்வாகம் தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மனோகரன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட குழுக்கள் 2 குழுக்களாக பிரிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை வளாகத்தில் குவிந்தனர். நேற்று காலை 5.30 மணிக்கு திரண்ட காவலர்களுக்கு காலை 6.30 மணிக்கே சிறைக்குள் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சோதனையில் வேலூர் மாவட்ட காவல் துறையினருடன் மத்திய சிறையின் அதி விரைவு படையினரும் இணைந்து செயல்பட்டனர். மேலும், காவல் துறையின் மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் உள்ள உயர் பாது காப்பு தொகுதி, தண்டனை கைதிகளின் தொகுதி மற்றும் சாதாரண விசாரணை கைதிகளின் தொகுதிகளில் சுமார் 1 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இது தொடர்பான அறிக்கையை சிறை நிர்வாகத்திடம் சோதனை நடத்தச் சென்ற குழுவினர் அறிக்கை அளித்து திரும்பினர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா, சிகரெட், பீடி மற்றும் ஆயுதங்கள் ஏதாவது பதுக்கப்பட்டுளளதா? என சோதனை செய்வதற்காக காலை 5.30 மணிக்கெல்லாம் அங்கு திரண்டு நின்றோம். ஆனால், 1 மணி நேரம் காக்க வைத்த பிறகே உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். எங்கள் இலக்குப்படி பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு தொகுதியில் உள்ள சிறைவாசிகளின் அறைகள், கழிப்பறைகள், பழைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், பயன்படுத்தாத பகுதிகள் என சல்லடைபோட்டு தேடினோம். ஒன்றுமே சிக்கவில்லை. ஒரே ஒரு கைதியிடம் இருந்து ரூ.30 பணம் மட்டுமே பறிமுதல் செய்தோம்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x