Published : 05 Mar 2022 06:32 PM
Last Updated : 05 Mar 2022 06:32 PM
சென்னை: மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, அணை கட்டுவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்க்கும் முரணானது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன் 2022-23 பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்துள்ளன. மேகதாது அணை கட்டும் பிரச்சிணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதே இம்மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது.
05.02.2007 அன்று நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும் 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் எந்தவித ஒப்புதலும் பெறாமலும் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது.
இந்த அறிவிப்பை கர்நாடக அரசு, சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அறிவித்துள்ளதாகவே தோன்றுகிறது. எப்படி இருப்பினும், தமிழக அரசு, தமிழக விவசாயிகளின் நலன் கருதி மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT