Published : 05 Mar 2022 04:20 PM
Last Updated : 05 Mar 2022 04:20 PM
தேனி: ”இவர்கள் யார் என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு? கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாதான்” என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக, தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.ராஜா பேசியது: "கட்சியிலிருந்து நீக்கியது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடம்தான் கேட்க வேண்டும். அதிமுகவுக்கு சசிகலா தலைமை தாங்க வேண்டும் என கேட்டு வந்தேன். தேர்தல் தோல்விக்கு காரணம் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும்தான் காரணம்.
என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நான் சசிகலாவை சந்தித்து வந்தேன். நான் எதிர்கட்சித் தலைவரையா சந்தித்து வந்தேன்? இவர்கள் யார் என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு? நான் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து கட்சியில் இருந்து வருகிறேன்.
எனக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாதான். அடுத்தக் கட்டமாக, அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என அவரை பார்த்து கேட்டு வந்துள்ளேன். என்னை கட்சியிலிருந்து நீக்கிய உத்தரவு செல்லாது. சசிகலா தலைமையில்தான் செயல்படுவோம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்தக் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பமும். சசிகலா யாரையும் கட்சியிலிருந்து எல்லாம் நீக்கவில்லை. சசிகலா யாரையும் வேண்டாம் எனக் கூறவில்லை. இந்த சந்திப்புக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சம்பந்தம் இல்லை.
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாதான். எனவே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட மாட்டேன். தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் இருந்தால், கட்சி ஒன்றும் இல்லாமல் போய்விடும், அதனால்தான் சசிகலாவை ஒன்றாக இருந்து செயல்படுவோம் என அழைத்து வருகிறோம்" என்றார்.
முன்னதாக, ’கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா, தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் எஸ்.முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் வைகை .கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் எஸ்.சேதுபதி ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்" என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT