Published : 05 Mar 2022 04:29 PM
Last Updated : 05 Mar 2022 04:29 PM
கடலூர்: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கூடுதல் வாக்குகள் பதிவான ஆத்திரத்தில், ரகளையில் ஈடுபட்ட தலைவரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
19 ஒன்றியக் கவுன்சிலர்களைக் கொண்ட விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த செல்லத்துரை கடந்த 2020-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே, தலைவரின் தன்னிச்சையான செயல்பாடுகளைக் கண்டித்தும், பொதுநிதியில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் கூறி ஊராட்சி ஒன்றியத் தலைவர் செல்லத்துரை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி கடந்த 29-12-2021 அன்று விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் 15 கவுன்சிலர்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், ஜனவரி 24ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் அவர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறினார்.
இதையடுத்து, ஜனவரி 24-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்தக் கோரி மனு அளித்தவர்கள், ஊராட்சிய ஒன்றிய அலுவலகம் வந்தபோது, கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடத்த இயலாது என்பதால், தேதி குறிப்பிடாம்ல ஒத்திவைக்கப்படுவதாக கோட்டாட்சியர் ராம்குமார் அறிவித்ததை அடுத்து, அவர்கள் திரும்பிச் சென்றனர்.
பின்னர், நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த மார்ச் 5-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்தப்படும் என கோட்டாட்சியர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோட்டாட்சியர் முன்னிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற்றது. இதில், ஒரு கவுன்சிலர்கள் தவிர 18 பேர் பங்கேற்றனர். அதில் அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக 16 பேர் வாக்களித்ததால் செல்லத்துரைக்கு எதிரான நிலை ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த செல்லத்துரை, பார்வைக் குறைபாடுள்ள கவுன்சிலருக்கு மற்றவர் எப்படி வாக்களிக்காலம் என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பியதோடு, ஒன்றியக் கூட்ட அரங்கில் அமளியில் ஈடுபட்டார். இதனால், அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை அரங்கை விட்டு வெளியேற்றினர். பின்னர் செல்லத்துரை தனது ஆதரவாளர்களுடன் கடலூர் - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டார். பின்னர் போலீஸார் அவரை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விருத்தாசலம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் தீவிர ஆதரவாளரான செல்லத்துரை, தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள, அதிமுகவிலிருந்து, திமுகவிற்கு மாறினார். இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியிழக்கும் வாய்ப்பு ஏற்பட்ட நிலையில், செல்லத்துரைக்கு ஆதரவாக திமுகவினர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கவுன்சிலர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். கூட்ட அரங்கில் கோட்டாட்சியரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட செல்லத்துரை மீது கோட்டாட்சியர் புகார் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT