Published : 05 Mar 2022 01:50 PM
Last Updated : 05 Mar 2022 01:50 PM
"உங்கள் பக்கத்துட்டு வீட்டுப் பெண் மாதிரிதான் நானும். ரொம்ப ஃபிரண்ட்லியான பொண்ணு" என்று மிக இயல்பாகப் பேசுகிறார். "வடசென்னையின் முக்கியப் பிரச்சினையாக எப்போதும் இருப்பது மழை நீர் தேக்கம், சுற்றுச்சூழல் மாசு" என்று பிரச்சினைகளுடன் அடுக்குவதுடன், அதை தீர்வு காண்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதாகச் சொல்கிறார். பதவியேற்ற மறுநாளில் நம்மிடம் அரசியலுடன் பர்சனல் பக்கத்தையும் பகிர்ந்திருக்கிறார் சென்னை மேயர் ஆர்.பிரியா.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாவட்டச் செயலராக உள்ள பகுதிக்கு உட்பட்ட வார்டில், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர் ஆர்.பிரியா. முதல்வர் ஸ்டாலின் தந்த வாய்ப்பு, சேகர்பாபுவின் ஆதரவால் சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ளார். 28 வயதான இவர் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் ஆவார். குறிப்பாக, வடசென்னையிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையும் இவரே பெற்றிருக்கிறார். பதவியேற்ற பிறகு பரப்பரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மேயர் பிரியாவிடம் ’இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்காக பேசினேன். அந்த உரையாடல் இதோ...
* அரசியலில் எப்போதிலிருந்து இருக்கிறீர்கள்?
"படிக்கும் காலத்தில், நான் ஒரு ஆசிரியராக வர வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், காலம் வேறு திசையைக் காட்டியது. கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால், இந்த நகர்ப்புற தேர்தலில்தான் நான் தீவிரமாக அரசியலில் இறங்கினேன்."
* அரசியல் ஆர்வம் எப்படி வந்தது?
"என்னுடைய குடும்பம் பாரம்பரிய அரசியல் பின்னணி கொண்டது. என்னுடைய மாமா செங்கை சிவம், திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். என்னுடைய தந்தை திமுக தொகுதி துணைச் செயலாளராக இருந்தவர். அரசியல் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்ததால் எனக்கும் அரசியலில் ஆர்வம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் நிச்சயம் கவுன்சிலராக தேர்தெடுக்கப்படுவேன் என்று நம்பினேன். ஆனால், மேயர் பதவி கிடைக்கும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை."
* சென்னை மாநகராட்சிக்கு முதல் தலித் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து...
"மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. கூடுதல் பொறுப்புணர்வுடன் இருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எனக்கு மிகப் பெரிய பொறுப்பை வழங்கி இருக்கிறார். இதுவரை எந்தக் கட்சியும் தலித் பெண் ஒருவரை மேயராக நியமித்தது இல்லை. ஆனால், முதல்வர் இந்த பெரிய முடிவை எடுத்து எல்லாருக்கும் முன்மாதிரியாகியுள்ளார். எல்லாவற்றைவிட என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை முதல்வர் எனக்கு அளித்திருக்கிறார். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்."
* மிக இளம் வயதில் மேயராகியிருக்கிறீர்கள்... உங்கள் தோழிகள், பகுதி மக்கள் என்ன சொன்னார்கள்..?
"இதுவரை யாரிடமும் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. கடந்த ஒரு வாரமாக நிற்பதற்குக் கூட நேரமில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். நம்மில் ஒருவர்தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள். அதைத்தான் நானும் விரும்புகிறேன்."
* அரசியலில் உங்கள் இன்ஸ்பிரேஷன் யார்?
"நிச்சயம், முதல்வர் ஸ்டாலின்தான். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் தமிழக முதல்வரானார். கடந்த 8 மாதங்களில் மக்களின் நலனுக்காக நிறைய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் முதல்வராகவே முடியாது என்று விமர்சித்தவர்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதிலளித்து வருகிறார். குறிப்பாக பெண்களுக்கும், திருநங்கைகளுக்கு நிறைய நலத்திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறார்.அவர்தான் என்றும் என்னுடைய இன்ஸ்பிரேஷன்."
* பிடித்த பெண் அரசியல் தலைவர்...
"குறிப்பிட்டு சொல்லும்படி, அப்படி யாரும் இல்லை."
*வட சென்னையில் இருந்து முதன்முதலாக சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். அங்கு உள்ள முக்கிய பிரச்சினையாக நீங்கள் பார்ப்பது... அதற்கான தீர்வாக என்ன வைத்துள்ளீர்கள்?
"வடசென்னையின் முக்கியப் பிரச்சினையாக எப்போதும் இருப்பது மழை நீர் தேக்கம், சுற்றுச்சூழல் மாசு இவை இரண்டுதான்.இதனை முதலில் சரிசெய்வதுதான் என்னுடைய கவனக் குவிப்பாக இருக்கும். இப்பிரச்சினைகளை தீர்க்க நிறைய திட்டங்களை கட்சியின் தலைமை வைத்துள்ளது. அதனை செயல்படுத்துவதுதான் எனது கடமை. வடசென்னையில் கல்வி வளர்ச்சி, சுகாதார மேம்பாட்டுகளுக்கு நிச்சயம் முக்கியத்துவம் கொடுப்பேன்."
* அரசியல், திமுக... இவை எல்லாம் தவிர்த்து பிரியா என்பவர் யார்?
"உங்கள் பக்கத்துட்டு வீட்டு பெண் மாதிரிதான் பிரியாவும். ரொம்ப ஃபிரண்ட்லியான பொண்ணு, எல்லோர்கிட்டயும் சீக்கிரமாக ஃபிரண்ட் ஆகிவிடுவேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள். ஓவியத்தில் பிரியாவிற்கு ஆர்வம் உண்டு, நிறைய ஓவியம் வரைந்திருக்கிறேன். டூடுல் வரைவதிலும் ஆர்வம் உண்டு."
* அரசியலுக்கு வரவிரும்பும் இளம்பெண்களுக்கு மேயர் பிரியா கூறுவது...
"பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் உறுதியானவர்கள். பெண்கள் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகளை பெண்கள் எளிதாக உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள். அதற்கான தீர்வைப் பெறுவதில் விரைந்து செயல்படுபவர்கள். பல புதிய திட்டங்களை அவர்களால் அறிமுகப்படுத்த முடியும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன். இளம்பெண்கள் அச்சம் கொள்ளாமல் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்."
* அடுத்த ஐந்து வருடங்கள் பிரியாவின் பயணம் எவ்வாறு இருக்கப் போகிறது?
"அடுத்து வரும் வருடங்கள் மக்கள் பணிதான் எனது பிராதானம். அதற்குதான் என்னை மக்களும், முதல்வரும் தேர்தெடுத்துள்ளார்கள். மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முயற்சி செய்வேன்."
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT