Published : 05 Mar 2022 05:59 AM
Last Updated : 05 Mar 2022 05:59 AM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் நடந்த மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மேயர்,துணை மேயர்களாக பதவியேற்றுக்கொண்டனர். சில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், கடந்த 2-ம் தேதி அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சிகளில்மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர்,துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.
சென்னை மாநகராட்சியில் நடந்த மறைமுகத் தேர்தலில் மேயராக ஆர்.பிரியா, துணை மேயராகமகேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மற்றமாநகராட்சிகளிலும் மேயர், துணைமேயர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அந்தந்த மாநகராட்சி ஆணையர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். இதில், 20 மாநகராட்சிகளில் மேயர்களாக திமுகவைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர். கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியின் சரவணன் பதவியேற்றார்.
அதேபோல நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில் பெரும்பாலான இடங்களில் இரு பதவிகளுக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சில இடங்களில் போட்டி இருந்ததால் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு நகராட்சி ஆணையர்களும் பேரூராட்சி செயல் அலுவலர்களும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.
இதுதவிர, உறுப்பினர்களிடையே மோதல், போதிய உறுப்பினர்கள் வராதது போன்ற காரணங்களால் சில இடங்களில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கட்சிகள் அதிர்ச்சி
சில இடங்களில் வார்டு உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தனர். இதனால், அந்த கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில், திமுக உறுப்பினர்கள் போட்டியிட்டு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பெற்றனர்.
மதுரை மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி உட்பட மாவட்டச் செயலர்கள் அனைவரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். நாகர்கோவில் மாநகராட்சியில் பாஜகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததாக கூறப்படும் நிலையில், 4 வாக்கு வித்தியாசத்தில் திமுக மேயர் வேட்பாளர் மகேஷ் வெற்றி பெற்றார். பண்ருட்டி நகராட்சியில் அதிமுக உதவியோடு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. திமுக வெற்றி பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி மறைமுகத் தேர்தலில் திமுக - அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. அதை தடுக்க போலீஸார் தடியடி நடத்தினர். உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு அறிவித்த திமுகவேட்பாளர் தோல்வி அடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT