Published : 05 Mar 2022 04:35 AM
Last Updated : 05 Mar 2022 04:35 AM
சேலத்தை அடுத்த மல்லூரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மனைவி பேரூராட்சி தலைவராகவும், கணவர் துணைத் தலைவராகவும் தேர்வு பெற்றனர்.
சேலம் மாவட்டம், மல்லூர் பேரூராட்சியின் 15 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், அதிமுக 5, திமுக 3, சுயேச்சைகள் 7 பேர் வெற்றி பெற்றனர். திமுக, அதிமுக-வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுக சார்பில் கவிப்பிரியா, சுயேச்சையாக லதா ஆகியோர் போட்டியிட்டனர். 14 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்ற நிலையில், சுயேச்சை வேட்பாளர் லதா 10 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றி பெற்றார்.
துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், தலைவராக தேர்வான லதாவின் கணவரும் சுயேச்சைவேட்பாளருமான அய்யனார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தேர்தலுக்குப் பின்னர் கணவர், மனைவி உட்பட சுயேச்சைகள் அனைவரும் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
4 பேரூராட்சியில் தள்ளிவைப்பு
இதனிடையே, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியின் 15 வார்டுகளில் திமுக 7, அதிமுக 7, விசிக 1 வார்டு என வெற்றி பெற்றிருந்தன. திமுக கூட்டணியில் தலைவர் பதவி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தலைவர் பதவிக்கான தேர்தலின்போது, திமுக கவுன்சிலர்கள், தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டிய விசிக கவுன்சிலர் குமார் உள்ளிட்டோர் வராததால், கோரம் இல்லாமல் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. வனவாசி, நங்கவள்ளி, பேளூர் ஆகிய பேரூராட்சிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT