Published : 04 Mar 2022 03:29 PM
Last Updated : 04 Mar 2022 03:29 PM

தற்காலிக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களின் பணியை வரன்முறைப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இ.எஸ்.வானுமாமலை, வி.ராஜலட்சுமி உள்ளிட்ட 45 பேர் இணைந்து தாக்கல் செய்துள்ள மனுவில், அரசின் எல்காட் நிறுவனம் மற்றும் தனியார் முகமைகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆப்பரேட்டர்கள் தேர்வு செய்யப்பட்டோம்.

நாங்கள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்டு, கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக கணினி இயக்குதல், புகைப்படம் எடுத்தல், ஓட்டுநர் உரிமம் அட்டை தயாரிப்பது உள்ளிட்ட அலுவலக உதவிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறோம்.

நீண்டகாலமாக பணியாற்றியவர்களின் பணியை வரன்முறைபடுத்தும்படி 2014 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை தரப்பில் தமிழக அரசிடம் கருத்துருக்கள் அனுப்பப்பட்டது. அதன்மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து, எங்களைப் போன்ற பணியார்களால் இரண்டு முறை தொடரப்பட்ட வழக்குகளில், பணி வரன்முறை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மனுதாரர்களை போல நியமிக்கப்பட்ட அனைவரும், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டனர். அதனால் பணி நிரந்தரம் கோர உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதி பார்த்திபன், கடந்த 2017 மற்றும் 202-ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றம் விரிவாக ஆராய்ந்து அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில், தற்போதைய மனுதாரர்கள் 45 பேரின் பணியையும் வரன்முறைபடுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதுதொடர்பான நடவடிக்கைகளை 8 வாரங்களில் முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x