Published : 04 Mar 2022 01:55 PM
Last Updated : 04 Mar 2022 01:55 PM
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 நகர்மன்ற தலைவர்கள் இன்று (மார்ச் 04) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப் 19-ம் தேதி நடைபெற்றது. 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து இன்று நகராட்சி தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. காலையில் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக தலைமைக் கழகம் அறிவித்த வேட்பாளர்களான (அரியலூர்) திமுக வேட்பாளர் சாந்தி, ஜெயங்கொண்டம் விசிக வேட்பாளர் சுமதி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அரியலூர் நகராட்சியில் அதிமுக சார்பில் ஜீவா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் சாந்தி 10 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜீவா 8 வாக்குகள் பெற்றார். ஜெயங்கொண்டத்தில் விசிக வேட்பாளர் சுமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து அரியலூரில் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, சாந்திக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். ஜெயங்கொண்டத்தில் ஆணையர் சுபாஷினி, சுமதிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சாந்திக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், சுமதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர் மலர்விழி, வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர் மார்கிரேட் ஆகியோருக்கு அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT