Published : 04 Mar 2022 01:24 PM
Last Updated : 04 Mar 2022 01:24 PM
கடலூர்: கடலூர் மாநகராட்சியில் மேயர் தேர்தலில் பலத்த போட்டிக்கு இடையே அதிகாரபூர்வமான திமுக வேட்பாளர் சுந்தரி ராஜா வெற்றி பெற்றார். திமுக தொண்டர்கள் வெடி வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
கடலூர் மாநகராட்சி உள்ள 45 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 36 வார்டுகளை கைப்பற்றியது. இந்த நிலையில், கடலூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் இடத்தைப் பிடிக்க திமுகவில் போட்டியிருந்தது. நகர செயலாளர் ராஜா மனைவி சுந்தரிக்கும், திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரன் மனைவி கீதாவுக்கும் பலத்த போட்டி இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக சுத்தரியை திமுக தலைமை அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று இரவு திமுக கவுன்சிலர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டு, புதுச்சேரியில் அருகே மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இது கடலூர் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்தநிலையில், நள்ளிரவில் போலீசார் ஓட்டலுக்கு சென்று ஐந்து, ஐந்து பேராக அழைத்து வந்தனர். இதில் 7 பேர் வரவில்லை. இன்று காலை 10 மணிக்கு கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதனையொட்டி மாநகராட்சி அலுவலக முழுவதும் கடலூர் எஸ்பி சக்தி கணேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திமுக உறுப்பினர்கள் 26 பேர், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர், பாமக, பாஜக உறுப்பினர்கள் தலா ஒருவர் வீதம் மொத்தம் 32 பேர் தேர்தல் நடத்தும் அறைக்கு வந்திருந்தனர்.
தேர்தல் நடத்தும் மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுபவர்கள் மனு அளிக்கலாம் என்று அறிவித்தார். இதனையடுத்து திமுக நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியும், திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரன் மனைவி கீதாவும் வேட்புமனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் 19 வாக்குகள் பெற்று சுந்தரி ராஜா வெற்றி பெற்றார். குணசேகரன் மனைவி கீதா 12 வாக்குகளை மட்டும் பெற்றார். ஒரு ஓட்டு, செல்லாத ஓட்டு ஆகியது.
சுந்தரி ராஜா வெற்றி பெற்றதை அடுத்து திமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுக ஆறு பேரும் தேர்தல் நடத்தும் இடத்துக்கு வராமல் தேர்தலைப் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT