Published : 04 Mar 2022 09:19 AM
Last Updated : 04 Mar 2022 09:19 AM

போரால் உணவின்றி வாடும் தமிழக மாணவர்களுக்கு உக்ரைனில் உதவிக்கரம் நீட்டி வரும் ஸ்ரீபெரும்புதூர் மருத்துவர்

ஸ்ரீபெரும்புதூர்: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் பெரும்புதூரைச் சேர்ந்த மருத்துவர், அவரது உதவியாளர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அடுத்த குண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷங்கர். இவரது மகன் பாலா ஷங்கர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவப் படிப்புக்காக உக்ரைன் நாட்டுக்குச் சென்றார். கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேர வேலையாக அங்கு உள்ள ரெஸ்டாரன்ட், ஹோட்டல் போன்றவற்றில் சமையல் உதவியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது.

சொந்த உணவகம்

மருத்துவப் படிப்பை முடித்த அவர் உக்ரைன் நாட்டில் உள்ளகார்கிவ் பகுதியில் சொந்தமாக உணவகத்தை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார். மேலும் தமிழகத்திலிருந்து மருத்துவம் படிப்பதற்காக வரும் மாணவர்களுக்கு, தங்கும் விடுதி, உணவு வசதிபோன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்து அவர்களுக்கு அடைக்கலம் தந்து சேவை செய்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. உக்ரைன் நாட்டில் கிவ், கார்கிவ் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதித்து உணவகம், மார்க்கெட்டுகள் போன்றவை தவிர்த்து அங்குச் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால், தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்க இடமின்றியும் உணவின்றியும் உயிருக்குப் பயந்து ரயில்வே சுரங்கப்பாதை, கட்டிடங்களின் அடித்தளத்தில் சென்று தஞ்சம் புகுந்தனர்.

8 நாட்களாக உணவு

இக்கட்டான சூழ்நிலையில் உணவின்றி தவித்து வந்த தமிழக மாணவர்களுக்கு பெரும்புதூரைச் சேர்த்த மருத்துவர் பாலா சங்கர், மருத்துவ மாணவர்கள் அப்பு கிருஷ்ணன், சஜிகுமார் உள்ளிட்ட மூவரும் தன்னலம் கருதாமல் அங்குள்ள சுற்றுப்புற கிராமங்களில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்திச் சமைத்துக் கடந்த 8 நாட்களாக உணவு வழங்கி வருகின்றனர். இவர்களின் மனிதாபிமான செயல் தமிழக மாணவர்களின் பெற்றோர்களை மகிழ்ச்சி அடையச் செய்ததோடு மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x