Published : 09 Apr 2016 01:02 PM
Last Updated : 09 Apr 2016 01:02 PM
மதுரையில் கடந்த மூன்று ஆண்டுக ளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாவட்ட அறிவியல் மையம், வெறும் அறிவிப்போடு நின்றுபோ னதால் பள்ளி மாணவ, மாணவி யரின் அறிவியல் ஆர்வம் வகுப்பறைகளுக்குள்ளேயே முடங்கியுள்ளது.
புரியாதவர்களுக்கு அறிவியல் ஒரு புதிர். புரிந்தவர்களுக்கு அது எளிமையானது. அதனால், கடந்த காலத்தில் ஆசிரியர்கள் புத்தகத்தில் இருக்கும் அறிவியல் பாடங்களை மாணவ, மாணவிகளுக்கு புரியும் வண்ணமும், அறிவை வளர்த்துக் கொள்ளவும், அறிவியல் மையங்களுக்கு அழைத்துச் சென்று அறிவியல் உபகரணங்களை நேரில் காட்டி எளிய நடையில் விளக்கி சொல்வார்கள்.
அத்தகைய அறிவியல் மையங்கள், கடந்த காலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சிறிய அளவிலாவது செயல்பட்டது. காலப்போக்கில், மாணவர்கள் அறிவியல் வகுப்பறை ஒரு அறைக்குள்ளேயே முடங்கியது. அதனால், பார்வையாளர் வருகையில்லாமல் அறிவியல் மையங்கள், இருந்த இடம் தெரியாமல் மாயமானது. முன்பு மதுரை ராஜாஜி பூங்காவில் குழந்தைகள் அறிவியல் பூங்கா இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வருகை குறைந்து நாளடைவில் அந்த அறிவியல் பூங்காவை இடித்துவிட்டு, மாநகராட்சி அந்த இடத்தில் மாநகராட்சி முருகன் கோயில், திருமண மண்டபம் கட்டியுள்ளது.
அதேபோல, காந்தி அருங்காட்சியக நுழைவு வாயிலின் இடதுபுறம், தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி சார்பில் சிறு அறிவியல் பூங்கா ஒன்று இருந்தது. தற்போது அந்த இடத்தில் அந்த அறிவியல் பூங்கா இருந்ததற்கான கல்வெட்டு மட்டும் உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மோகன் எம்.பி.யாக இருந்தபோது அவரது நிதியுதவியில் கட்டப்பட்ட அறிவியல் மையம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. தற்போது அதுவும் செயல்பாட்டில் இல்லை. மதுரை மட்டுமில்லாது, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிக் குழந்தைகள் தங்கள் அறிவியல் சார்ந்த திறமைகளை வளர்க்க ஒரு அறிவியல் மையம் கூட இல்லை. இதனால், பள்ளிக் குழந்தைகளுடைய அறிவியல் சார்ந்த திறமை, ஆர்வம் வகுப்பறைக் குள்ளேயே முடங்கிப் போனது.
இந்நிலையில் கோவை, மதுரையில் அறிவியல் மையம் அமைப்பதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரே நேரத்தில் தமிழக அரசு அறிவித்தது. மதுரையில் ஆயிரம் சதுர அடியில் அறிவியல் மையம் அமைப்பதாகவும், அதில் ஒரு கோளரங்கம், சுற்றுச்சூழல், உயிரியல் தொழில்நுட்ப அறிவியல் பூங்கா மற்றும் மூலிகைத் தோட்டம், மரபுசாரா எரிசக்தி பூங்கா அமைப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது கோவையில் ரூ. 3 கோடியில் அறிவியல் மையம் அமைக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளது. ஆனால், அதனுடன் அறிவிக்கப்பட்ட மதுரை மாவட்ட அறிவியல் மையம் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. அதுபோல, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட்டதால், அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் அறிவியல் பூங்கா அமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நியூட்ரினோ ஆய்வுமையத் திட்டமே முடங்கிவிட்டதால், அந்த அறிவியல் பூங்காவும் வர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மதுரையில் அறிவியல் பூங்காவோ, அறிவிக்கப்பட்ட மாவட்ட அறிவியல் மையமோ அமைக்கப்பட்டால் மதுரை மட்டுமில்லாது திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்ட பள்ளி குழந்தைகள், எதிர்காலத்தில் விஞ்ஞானியாகவோ, அறிவியல் ஆசிரியர்களாகவோ, அறிவியல் வல்லுநர்களாகவோ வருவதற்கு உந்துதலாக இருக்கும். அதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக மதுரையில் அறிவியல் பூங்கா அல்லது மாவட்ட அறிவியல் ஆய்வு மையம் அமைக்க அரசியல் கட்சிகள் உறுதி அளித்து, அவற்றை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT