Published : 16 Apr 2016 11:54 AM
Last Updated : 16 Apr 2016 11:54 AM

ஜெயலலிதாவை பார்க்க 6 மணி நேரம் வெயிலில் தவித்த பெண்கள்: சாக்குப்பை துணிகளை தலையில் அணிந்து சமாளிப்பு

அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் கொளுத்தும் வெயிலில் பெண்கள் 6 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தனர். குளுக்கோஸ், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக வழங்கப்பட்டன.

விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 14 தொகுதி களைச் சேர்ந்த அதிமுக மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக் கோட்டையில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். விருத்தாச்சலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் 4 பேர் வெயிலுக்கு இறந்ததால் நேற்று அருப்புக்கோட்டை பொதுக்கூட்டத்தில் முன்னெச்சரிக்கையாக நடமாடும் மருத்துவமனை, ஆம்புலன்ஸ்கள், கழிப் பிட அறை, 10 அடிக்கு ஒரு இடத்தில் குடிநீர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிரச்சாரக் கூட்டத் துளிகள்

* பொதுக்கூட்டத்துக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த பெண்கள், ஆண்கள் பெரும்பாலானோர் காலணி அணியாததால் தரையில் கால் வைக்க முடியாமல் சிரமப்பட்டனர். அவர்கள், பிளக்ஸ் பேனர் துணிகளைக் கிழித்தும், தண்ணீர் பாக்கெட் எடுத்து வந்த சாக்குத் துணிகளைக் கிழித்தும் கால்களில் சுற்றிக் காலணிகளாக்கி கொண்டது பரிதாபமாக இருந்தது.

* கூட்டத்துக்கு பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களே வந்திருந்தனர். காலை 9 மணி முதலே பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் லாரிகள், பஸ், ஆட்டோக்களில் அழைத்து வந்து அவர்கள் குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிமுகவினர் ஒரு சாப்பாடு பார்சல், செலவுக்கு ரூ.200 வழங்கியதாக தெரிவித்தனர்.

* வெயிலில் பெண்கள் காலை 10 மணி முதல் ஜெயலலிதா பேசி முடிக்கும் வரை மாலை 4 மணி வரை ஒரே இடத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா பேசி முடிக்கும் முன்பே பெண்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். போலீஸார், இன்னும் 5 நிமிடத்தில் முடிந்துவிடும் என அவர்களை கெஞ்சிக் கூத்தாடி அமர வைத்தனர்.

* 10 அடிக்கு ஒரு இடத்தில் சாக்கு மூட்டைகளில் தண்ணீர் பாக்கெட்டுகள், குளுக்கோஸ் பாட்டில்கள் தாராளமாக வழங்கப்பட்டதால், வெயிலை தாக்குப் பிடித்து பெண்கள் அமர்ந்திருந்தனர்.

* பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் பீடி, சிகரெட், தீப்பெட்டி, புகையிலை எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

* வெயில், புழுக்கத்துடன் வியர்வை கொட்டியதால் அதிமுகவினர் விசிறி மற்றும் தொப்பிகளை வழங்கினர். ஆனாலும், வெயிலைச் சமாளிக்க முடியாமல் பெண்கள், அம்மாவை பார்க்க இப்படி உட்கார வைச்சுட்டார்களே என புலம்பினர்.

* ஜெயலலிதா, இந்த தேர்தலில் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் வடக்கு பார்த்து பேசும் வகையிலேயே அமைக்கப்படுகிறது. அதுபோல், அருப்புக்கோட்டையிலும் ஜெயலலிதா வடக்கு பார்த்தே பேசும் வகையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

* ஜெயலலிதா வரும் வரை சாப்பிடாமல் வெயிலில் சோர்ந்திருந்த பெண்கள், அவரை பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமாக மேடையை நோக்கிச் சென்று இரட்டை விரலைக் காட்டி குலவையிட்டு ஆர்ப்பரித்தனர்.

* கடந்த மக்களவைத் தேர்தலில் செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா எனக் கூட்டத்தினரைப் பார்த்து ஜெயலலிதா கேள்வி கேட்டு பிரச்சாரம் செய்தது பிரபலமானது. இந்த முறை ‘உங்களால் நான், உங்களுக்காக நான்’ என பேசி வருவதும் பிரபலமாகத் தொடங்கியுள்ளது.

* ஜெயலலிதா பேசும் மேடையில் பாதுகாப்பு போலீஸாரைத் தவிர, வேறு யாருக்கும் அனுமதியில்லை. ஆனால், நேற்று ஜெயலலிதாவுக்குப் பின்புறம் இடதுபுறத்தில் சந்தனக் கலர் கோட் அணிந்திருந்த ஒருவர் ஜெயலலிதா பேச்சின் இடையே, அவ்வப்போது பெண்கள் பகுதியை நோக்கி கைதட்டச் சொல்லி சைகை காட்டி கைத்தட்டிக் கொண்டே இருந்தார்.

* ஜெயலலிதாவை பார்க்கும் ஆர்வத்தில் அதிமுக தொண்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் மீது விபரீதம் தெரியாமல் ஏறி நின்றனர்.

மீண்டும் முக்கியத்துவம் பெற்ற தம்பித்துரை

தம்பித்துரை எம்.பி., கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவில் ஓரங்கப்பட்டிருந்தார். மக்களவைத் தேர்தலில் கரூரில் வெற்றிபெற்று மக்களவை துணைத் தலைவராகி, தற்போது கட்சியில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளார். இந்த தேர்தலில் ஜெயலலிதாவின் முழுப் பிரச்சார ஏற்பாடுகளையும் தம்பித்துரைதான் கவனித்து வருகிறார்.

அருப்புக்கோட்டையில் ஜெயலலிதா பேசும் மேடைக்கு காலையிலேயே வந்திருந்து மேடை அலங்காரத்தை முன்னின்று கவனித்தார். ஜெயலலிதா அமர்ந்து பேசும் இருக்கையில் சேர், மைக், ஒலிபெருக்கி உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களைக்கூட உன்னிப்பாக கவனித்து ஏற்பாடு செய்தார். ஜெயலலிதா மேடைக்கு வரும் வரை, மேடையிலேயே நின்று கட்சியினருக்கு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x