Published : 03 Mar 2022 06:13 PM
Last Updated : 03 Mar 2022 06:13 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவில் கவுன்சிலர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி, சிலர் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், மேயர் பதவிக்கு கட்சிப் பரிந்துரை பட்டியலில் கூட இடம்பெறாத எளியவருக்கு, தகுதியின் அடிப்படையில் திமுக தலைமை நேரடியாக வாய்ப்பு வழங்கி அதிரடி காட்டியுள்ளது.
திண்டுக்கல் மாநராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளின் தற்போதைய பலம் 42 ஆக உள்ளது. அதிமுக 5, பாஜக 1 கவுன்சிலர்கள் உள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பில் குறிப்பிட்ட கவுன்சிலர்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் பணபலம் மிக்க சிலர் திண்டுக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகள், அமைச்சரையும் கடந்து கட்சித் தலைமை வரை சிபாரிசுடன் சென்று மேயர் பதவியை கைப்பற்ற முயற்சித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் சிபாரிசுப் பட்டியலில் இருந்த கவுன்சிலர்கள் அனைவரும் முதன்முதலாக கட்சியில் இணைந்து கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தேர்தலுக்கு முன்பு இவர்களுக்கு கட்சியில் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லாதது தெரியவந்தது. இதனால் இவர்களுக்கு மேயர் பதவியை வழங்க முன்வரவில்லை. இதையடுத்து சிபாரிசு பட்டியலை நிராகரித்துவிட்டு, கவுன்சிலர்களில் சீனியர் யார், கட்சியில் என்ன பொறுப்பு வகிக்கின்றனர். அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து உளவுத்துறை மூலம் திமுக கட்சித் தலைமை தகவலை சேகரித்துள்ளது.
இதில் 23 வார்டில் தேர்வு செய்யப்பட்ட இளமதி (42), கடந்த பத்து ஆண்டுகளாக திமுகவில் வார்டு பிரதிநியாக பதவி வகித்துவருவதும், 2006 முதல் 2011ம் ஆண்டுவரை திண்டுக்கல் நகராட்சியாக இருந்தபோது கவுன்சிலராக பதவி வகித்த விபரமும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாதாரண குடும்பப் பின்னணியில் உள்ள நபர் இளமதி. இவர் பி.பி.ஏ., படித்துள்ளார். இவரது கணவர் ஜோதி பிரகாஷ், வடமதுரையில் உள்ள ஆசிரியர் கூட்டுறவு நாணய சங்க செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க பலரும் பணபலத்துடனும், சிபாரிசுகளுடனும் முயற்சி மேற்கொண்டுவந்த நிலையில், இளமதியோ அவரது குடும்பத்தினரோ, மேயராக எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கட்சித் தலைமைக்கு மாவட்ட திமுக அளித்த சிபாரிசுப் பட்டியலிலும் இவர் பெயர் இடம்பெறவில்லை. கட்சியில் பொறுப்பு, ஐந்து ஆண்டுகள் கவுன்சிலராக இருந்த அனுபவம், பி.பி.ஏ., படித்துள்ளது, என உளவுத்துறை பரிந்துரை அடிப்படையில் இவருக்கு மேயர் வேட்பாளர் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மேயராக முயற்சித்த கவுன்சிலர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
எந்தவித பணபலமும் இல்லாத, சிபாரிசும் இன்றி கட்சித் தலைமையே இளமதியை நேரடியாக தேர்வு செய்து அதிரடி காட்டியுள்ளது அடிமட்ட தொண்டர்களிடையே யாரும் பதவிக்கு வரலாம் என்ற உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திமுகவினர் கூறுகின்றனர்.
துணை மேயர் வேட்பாளராக நகர செயலாளர் ராஜப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கட்சிப்பணியை திறம்பட செய்துவந்ததால் இவருக்கு துணைமேயராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT