Published : 03 Mar 2022 04:54 PM
Last Updated : 03 Mar 2022 04:54 PM
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் கனமழையால் பாதிக்கப்பட்ட 7,016 விவசாயிகளுக்கு ரூ.7.10 கோடி மழை நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது.
புதுவையில் கடந்த ஆண்டு இறுதியில் அதிகளவு கன மழை பெய்தது. மழையால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு சிகப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம், மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500 மழை நிவாரணமாக வழங்கியது.
சாகுபடி செய்த பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இப்போது இந்த நிவாரணத்தை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்கில் இத்தொகை செலுத்தப்பட உள்ளது. இது பற்றி முதல்வர் ரங்கசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"கடநத ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரண தொகை எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.7.10 கோடி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 16 விவசாயிகள் பயனடைவர். கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத்தொகை புதுவையை சேர்ந்த 6 ஆயிரத்து 54 விவசாயிகளுக்கு ரூ.5.97 கோடி , காரைக்காலை சேர்ந்த 731 விசாயிகளுக்கு ரூ.97.55 லட்சம், ஏனாமை சேர்ந்த 231 விவசாயிகளுக்கு ரூ.15.90 லட்சம் விரைவில் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT