Published : 23 Apr 2016 07:44 AM
Last Updated : 23 Apr 2016 07:44 AM
புத்தகங்கள் இல்லாத இல்லம் ஜன்னல்கள் இல்லாத வீட்டை போன்றது என்பர். புத்தகங்களை நேசித்து அவற்றை சேமித்து எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதை இந்தகால தலைமுறையினருக்கு உணர்த்தியவர் காரைக்குடி அருகே கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா.
இதுகுறித்து அவரது நினைவு களை பகிர்ந்த காந்திகிராமம் பல்கலைக்கழக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் எஸ். சிதம்பரம் கூறியதாவது:
1926-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தவர் முத்தையா செட்டியார். இளம் வயதிலேயே ஓவியம் தீட்டும் திறமை படைத்த முத்தையா சென்னை சென்று ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனம் ஒன்றை நடத்தினார். ஓவியங்கள் வரைவதற்காக முதலில் புத்தகங்களை வாங்கிய இவர், பிறகு புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டு அவற்றை சேகரிக்கத் தொடங்கினார். இவ்வாறு சேகரித்த புத்தகங்களை ரோஜா முத்தையா, கோட்டையூரில் உள்ள தனது வீடு முழுவதும் குவித்தார். புத்தகங்கள் தனது வீட்டை நிறைத்தபோது, 2 வீடுகளை வாடகைக்கு அமர்த்தி அங்கும் புத்தகங்களை சேகரித்து ஆராய்ச்சிக் கூடமாக்கினார். இவர் புத்தகங்ளை வாங்குவதோடு நிறுத்திவிடாமல் அவற்றைப் படித்து, தலைப்பு வாரியாகப் பிரித்து அட்டவணைப்படுத்தி, படிப்பவர்களுக்கு பயன்படும் வகையில் அவற்றை அடுக்கியும் வைத்தார்.
அழியாத சொத்து புத்தகம்
ரோஜா முத்தையா தனது வாழ்நாளில் சேகரித்த புத்தகங்கள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகம். இவற்றில் பழமையான தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களும், மருத்துவம், தத்துவம், வரலாறு, இசை, நாடகம், கலைக் களஞ்சியத் தொகுப்புகள், நாட்டுப் புறப் பாடல்கள், அகராதிகள் ஆகிய வையும் அடங்கும். இதைத் தவிர 2 லட்சம் சிறுகதைகள், 5 லட்சம் தினச்செய்தி துணுக்குகள், புத்தரைப் பற்றிய 2,000 கட்டுரைகள், ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், விலங்குகள் தொடர்பான 5,000 கட்டுரைகள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சஞ்சிகைகள், 15 லட்சம் பழமொழிகள், செட்டிநாட்டு நகரத்தார் சமூகச் சடங்குகள் பற்றிய ஏடுகள், 750 மரச்சிற்பங்கள், விற்பனைப் பத்திரங்கள், அடகுச்சீட்டுகள், 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நாடக - திரைப்படத் துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட ஏராளமான சேகரிப்புகளைக் கொண்ட அரிய பெட்டகமாக இவரது வீட்டின் நூலகம் திகழ்கிறது.
தனது நூலகத்தை தான் வாழும் நாளிலேயே தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்குக் கொடுக்க எண்ணினார். அந்த முயற்சி ஏனோ வெற்றி பெறவில்லை.
வசப்படுத்திய சிகாகோ பல்கலை
இந்நிலையில், சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சி.எஸ்.லட்சுமி என்பவர் தான் பயன்படுத்திய முத்தையா நூலகத் தின் சிறப்புகளைப் பற்றி தனது நண்பர்களிடமும், பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் எடுத்துக் கூறி னார். பல்கலைக்கழக நிர்வாகம் முத்தையாவைத் தொடர்பு கொண்டு நூலகத்தைத் தருமாறு வேண்டியது. ஆனால் தான் அரும்பாடுபட்டுச் சேகரித்த அறிவுப் பெட்டகத்தை வெளி நாட்டுப் பல்கலைக் கழகத்துக்கு அளிக்க அவர் விரும்பவில்லை. தனது சேகரிப்புகள் தமிழகத்துக்கே பயன்பட வேண்டும் என விரும் பினார். விருப்பம் நிறைவேறாத நிலையில் அவரது உயிர் பிரிந் தது. முத்தையாவின் நூலகத்தை அரசுடைமை ஆக்க, எந்த முயற்சி யும் எடுக்காத நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி நூலகத்தை தங்கள் வசப்படுத்தியது. இருப் பினும் தற்போது சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் மொழி அறக்கட்டளையின் கூட்டு முயற்சியால் முத்தையா நினைவாகவே ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ என்ற பெயரில் சென்னை கிழக்கு முகப்பேரில் 1994-ம் ஆண்டு நிறுவப்பட்டு, இன்று வரை சிறப்பாகச் செயல்படுகிறது.
1995-ம் ஆண்டு முதல் இந்த நூலகம் ஆய்வாளர்களின் பயன் பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தற்பொழுது தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிதம்பரம் மேலும் கூறியதாவது: தனிச்சிறப்புகள் மொழிசார்ந்த பண்பாட்டு ஆய்வு நூலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் திகழ்கிறது. நூல் விவரங்களை தமிழிலேயே படிப்பதற்கான வகையில் கணிப்பொறி நூல் பட்டியலைக் கொண்ட முதல் நூலகமாக விளங்குகிறது. பிற இந்திய மொழியினரும் தமிழ் நூல்களின் விவரங்களை அவரவர் மொழியில் காணக்கூடிய வசதியும் இங்கு உண்டு. இங்கு உள்ள நூல்களின் விவரங்களை உலகின் எந்த மூலையில் இருப்பவரும் பார்க்க வசதியாக 1996-ம் ஆண்டு முதல் இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT