Published : 03 Mar 2022 08:15 AM
Last Updated : 03 Mar 2022 08:15 AM
பெரியகுளம்: அதிமுக - அமமுக ஒருங்கிணைத்து செயல்படவும், சசிகலா, தினகரன் ஆகியோரை நிபந்தனையின்றி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தேனி மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் சையதுகான் தலைமை வகிக்க, முன்னாள் எம்பி பார்த்திபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகள் பலரும் பல்வேறு கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்துப் பேசினர்.
இதில் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டதால்தான் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது. எனவே அதிமுக மற்றும் அமமுக இணைந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற தோல்விகள் தொடரும், இயக்கம் வளராது.
எனவே பிரிந்து சென்றவர்களை உடனடியாக கட்சியில் ஒருங்கிணைத்து களப்பணி ஆற்ற வேண்டும். அப்போதுதான் அதிமுக பழைய வலிமையைப் பெற முடியும் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் பலரும் வலியுறுத்தினர்.
கட்சி நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தீர்மானமாக நிறைவேற்றித் தர ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து ஒரே இயக்கமாக செயல்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ‘‘சென்னை சென்று கட்சி தலைவர்களுடன் பேசி விரைவில் முடிவு எடுப்போம்” என ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவினருக்கு உறுதியளித்தார்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் சையதுகான் கூறும்போது, “வரும் 5-ம் தேதி தேனியில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT