Published : 03 Jun 2014 10:00 AM
Last Updated : 03 Jun 2014 10:00 AM
‘அம்மா குடிநீர்’ தயாரிக்கும் 2-வது ஆலையை தென் மாவட்டங்களில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்குள் பணிகளை முடித்து, தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இந்தியாவிலேயே முதல் முறையாக ‘அம்மா குடிநீர்' என்ற பெயரில் பாட்டில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அடைத்து பஸ் நிலையங்கள், அரசு பஸ்களில் ஒரு லிட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்து வருகிறது.
இந்த குடிநீரை தயாரிப்பதற்காக முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்துக் கழக நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தினமும் 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்கப்படுவதால் இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் அதிக அளவு நீர் கிடைப்பதால் மேலும் ஒரு 'அம்மா குடிநீர்' உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அறிவித்திருந்தார். ஆனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து தமிழகம் முழுவதும் குடிநீர் பாட்டில்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கும். எனவே 2-வது குடிநீர் உற்பத்தி நிலையத்தை தென் மாவட்டங்களில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தனியார் தண்ணீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிகராக தரமான முறையில் தமிழக அரசு குடிநீரை சுத்திகரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த கோடை விடுமுறையில் வழக்கத்தை விட, 30 சதவீதம் கூடுதலாக குடிநீர் விற்பனை ஆகியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் 2-வது ஆலை அமைக்க போதிய நீர் ஆதாரம் இருக்கிறது. இருப்பினும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் இங்கிருந்து தண்ணீர் விநியோகம் செய்வது சிரமமாக இருக்கிறது.
எனவே, 2-வது குடிநீர் உற்பத்தி ஆலையை தென் மாவட்டங்களில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.திருச்சி அல்லது மதுரை மாவட்டத்தில் இந்த ஆலை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிதி ஆண்டிற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை தொடங்கும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT