Published : 02 Mar 2022 06:44 PM
Last Updated : 02 Mar 2022 06:44 PM
புதுடெல்லி: உக்ரைன் எல்லை நாடுகளிலிருந்து இன்று மேலும் மூன்று விமானங்களில் சுமார் 450 இந்தியர்கள் டெல்லி வந்தனர். இவர்களில் 25 தமிழக மாணவர்களும் அடங்குவர்.
உக்ரைன் மீதானத் தாக்குதலை அதன் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ரஷ்யா இன்று தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, அந்த மூன்று பகுதிகளின் கல்வி நிலையங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இவர்களில் இந்தியர்களை மத்திய அரசு, 'ஆப்ரேஷன் கங்கா' எனும் பெயரில் மீட்டு அழைத்து வருகிறது. உக்ரைனின் எல்லையில் உள்ள ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, போலாந்து, ருமேனியா மற்றும் மால்டோவா ஆகியவற்றிலிருந்து ஏர் இந்தியா விமானங்கள் மூலம் டெல்லி திரும்புகின்றனர்.
இந்த மீட்பு விமானங்கள் இன்று முதன்முறையாக அதிக அளவில் எட்டு என்ற அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்று காலை வரை இரண்டு விமானங்கள் டெல்லி வந்தன. மேலும் மூன்று விமானங்கள் சுமார் 450 இந்தியர்களுடன் மதியம் வந்து சேர்ந்துள்ளன. இவற்றின் முதல் விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இருவரும், இரண்டாவதில் ஒருவர் மற்றும் மூன்றாவதில் 22 மாணவர்களும் டெல்லி வந்துள்ளனர். இவர்களை டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு இல்ல அதிகாரிகள் வரவேற்று உபசரித்து தமிழகத்திற்கு விமானங்களில் அனுப்பி வைக்கின்றனர்.
தொடக்கத்தில் இந்த மாணவர்கள் அனைவருமே சென்னைக்கு நேராக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து தமிழக அரசால் அமர்த்தப்பட்ட வாகனங்கள் மூலமாக இந்த மாணவர்கள் தம் வீடுகளுக்குச் சென்றனர். இதில் பிடிக்கும் கூடுதல் பயணநேரத்தை குறைக்கும் பொருட்டு தற்போது அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதன்படி, இன்று டெல்லி வந்த ஐந்து விமானங்களின் 53 தமிழக மாணவர்களும் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுவரையும் வந்த தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 143 ஆகும். மேலும், மூன்று விமானங்கள் இன்று உக்ரைனில் பயிலும் இந்தியர்களுடன் டெல்லிக்கு வருகை தரவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT