Published : 02 Mar 2022 10:46 AM
Last Updated : 02 Mar 2022 10:46 AM

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது?- தேதிகளை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழகத்தில் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

சென்னையில் டிபிஐ வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும். கரோனா பேரிடரால் கடந்த காலங்களில் பொதுத் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் நிலவியது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்து ஆண்டு நடைபெறவில்லை.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை 10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது.

*10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். இதை 9 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.
*11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31 வரை பொதுத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை 8.49 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
*12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 5 தொடங்கி மே 28 வரை பொதுத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை 8.36 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் எப்போது? 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜூலையில் நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 வரையில் பள்ளிகள் செயல்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் மே 13 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

எந்தெந்த பாடத்திற்கு எந்தத் தேதியில் தேர்வு நடைபெறும் என்பது குறித்த விரிவான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு எப்போது? தேர்வுகள் முடிந்து 2022-23 கல்வி ஆண்டிற்காக ஜூன் 13, 2022ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x