Published : 02 Mar 2022 08:22 AM
Last Updated : 02 Mar 2022 08:22 AM
சாயல்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டிட மேற்கூரை மரச்சட்டம் பெயர்ந்து விழுந்ததில் 6 மாணவர் கள் காயம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.வாகைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 42 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியை, 2 ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.
இப்பள்ளியில் 2 வகுப்பறைகள் உள்ளன. ஒரு கான்கிரீட் கட்டிடமும், ஓடு வேய்ந்த பழைய கட்டிடமும் உள்ளன. நேற்று காலை பள்ளிக்கு வந்த குழந்தைகள் பழைய ஓட்டுக் கட்டிடத்தில் இருந்தனர்.
அப்போது மேற்கூரை மரச்சட்டம் திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் 2-ம் வகுப்பு மாணவர் அகிலேஷ்(7), நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி (8) ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஒன்றாம் வகுப்பு மாணவர் பிரதீப்புக்கு(5) தலை, முகத்தில் வீக்கம் ஏற்பட்டது. அருகில் இருந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் மத்தீஸ்(8), மகிபிரதீவ்(8), நான்காம் வகுப்பு மாணவன் திவான்(9) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.
காயமடைந்த குழந்தைகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அகிலேஷ், வைஷ்ணவி, பிரதீப் ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், கடலாடி வட்டாட்சியர் சேகர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உம்முல் ஜாமியா, பிடிஓ நடராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
காயமடைந்த குழந்தைகளை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் சங்கர்லால் குமாவத், முதன்மைக் கல்வி அலுவலர் பாலு முத்து உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
முதன்மைக் கல்வி அலுவலர் கூறுகையில், ஆட்சியர் இப்பள்ளியில் பழைய பள்ளிக் கட்டிடத்தை உடனடியாக இடிக்க உத்தரவிட்டுள்ளார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT