Published : 02 Mar 2022 06:51 AM
Last Updated : 02 Mar 2022 06:51 AM
செங்கம் அருகே குப்பனத்தம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பனத்தம் எம்ஜிஆர் நகரில், குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. இக்கடைக்கு வரும் நபர்களால், அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வந்துள்ளனர். இது குறித்து வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறைக்கு முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், டாஸ்மாக் மதுபானக் கடையை நேற்று பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “டாஸ்மாக் மதுபானக்கடை அமைந்துள்ள வீதியில் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நடந்து கூட செல்ல முடியவில்லை. மது குடித்துவிட்டு சாலையில் மதுபாட்டிலை தூக்கி வீசி உடைக்கின்றனர். வீதியில் சிறுவர்களால் விளையாட முடியவில்லை. உடைக்கப்பட்ட பாட்டில் கண்ணாடி, கால்களில் குத்தி காயம் ஏற்படுகிறது. மாணவிகள் செல்லும்போது, இரு சக்கர வாகனத்தை மறிக்கின்றனர்.
மது அருந்த வரும் நபர்களின் அராஜகம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மதுபானக்கடை முன்பு குடித்துவிட்டு ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். அவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. கிராம மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஓராண்டாக வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது வேதனை மற்றும் கோரிக்கையை அவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர். விபரீதம் நடந்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள் என நினைக்கிறோம். மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்தசெங்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT