Last Updated : 01 Mar, 2022 07:57 PM

 

Published : 01 Mar 2022 07:57 PM
Last Updated : 01 Mar 2022 07:57 PM

"நாங்கள் மீட்கப்பட்டோம்... எங்கள் நண்பர்கள் உள்ள கீவ் நகரில்தான் பேராபத்து!" - உக்ரைன் அனுபவம் பகிர்ந்த தமிழக மாணவர்கள்

சோனியா (இடது). காயத்ரி (வலது) .

உக்ரைனின் மேற்குப் பகுதியிலிருந்து போர் பதற்றத்துக்கு இடையே தமிழகத்தைச் சேர்ந்த 21 மாணவர்கள் திங்கள்கிழமை இரவு சென்னை வந்து சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் உக்ரைனின் ’Uzhorod National Medical University’-ல் படிப்பவர்கள். ஆபரேஷன் கங்கா நடவடிக்கையின் மூலம் நாடு திரும்பிய இவர்களில் சிலரிடம் பேசினோம். கடந்த சில நாட்களாக தங்களது வாழ்வின் மறக்க முடியாத தருணங்களைக் கடந்து வந்ததாக சில மாணவிகள் நம்மோடு பகிர்ந்து கொண்டனர். கீவ் நகர் உள்ளிட்ட உக்ரைனின் கிழக்குப் பகுதியில்தான் பேராபத்தான போர்ச் சூழல் நிலவுவதாக அவர்கள் கூறினர். அதன் விவரம்:

காயத்ரி - திருவண்ணாமலை: “எனது சொந்த ஊர் திருவண்ணாமலை. மருத்துவம்தான் என்னுடைய கனவு. அதனை நிறைவேற்றுவதற்காகத் தான் கடந்த டிசம்பர் மாதம் உக்ரைன் சென்றேன். நான் பல்கலைகழகத்தில் இணைந்து 2 மாதங்கள்தான் முடிவடைந்திருந்தது. எல்லாம் நல்லபடியாகதான் சென்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் அங்குள்ள மாணவர்கள் இந்தப் போர் சூழலை சந்தித்தோம். முதலில் அந்தச் செய்தி கேட்டதும் நாங்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். உண்மையைக் கூறவேண்டும் என்றால், ஒருவாரம் முன்னர் வரை எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கப் போகிறது என்று எல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. காரணம், நாங்கள் உக்ரைனின் மேற்குப் பகுதியில் இருந்தோம். அங்கு போருக்கான எந்த அறிகுறியும் இல்லை. எனது பெற்றோர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நிலைமையை கூறிய பின்னர்தான் எங்களுக்கு தீவிரத்தன்மை புரிய ஆரம்பித்தது.

Uzhorod National Medical University

இந்த நிலையில்தான் நான் விமான பயணத்திற்கு புக் செய்தேன். ஆனால், விமானங்களை எல்லாம் ரத்து செய்த தகவல் கிடைத்தது. இதனால் எங்களுக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த வாரம் முதல் இந்திய தூதரகம் எங்களுக்கு உதவ ஆரம்பித்தார்கள். உக்ரைனை கடந்து ஹங்கேரிக்குச் செல்ல சுமார் 9 மணி நேரம் ஆனது. எல்லாவற்றையும் இந்தியத் தூதரகம் கவனித்துக் கொண்டது.

இதன்பின்னர்தான் ஹாங்கேரி வழியாக நாங்கள் இந்தியா வந்தடைதோம். இந்திய தூதரகம்தான் எங்களுக்கு அனைத்து உதவியையும் செய்து எங்களை பத்திரமாக இந்தியா கொண்டு வந்துள்ளது. எனது நண்பர்கள் இன்னமும் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் சில நாட்களில் வருவார்கள் என்று நம்புகிறேன். இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கு, தமிழக முதல்வருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கீவ் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் இன்னமும் இந்திய மாணவர்கள் இருக்கிறார்கள். எங்களால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர்களை சீக்கிரமாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் நான் வைக்கிறேன்.”

சோனியா - கன்னியாகுமரி: ”ஹங்கேரி எல்லையில் மட்டுமே நாங்கள் சற்று சிரமத்தை சந்தித்தோம். தேவையான உணவு அனைவரிடமும் இல்லை. உக்ரைன் எல்லையிலிருந்து ஹங்கேரி செல்வோமா என்று பயந்த நிலையில், இந்திய தூதரகத்தின் உதவியோடு நாங்கள் பத்திரமாக ஹங்கேரி சென்றடைந்தோம்.

எங்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் தூதரக அதிகாரிகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டனர். டெல்லி வந்தததும் எங்களை வரவேற்ற தமிழக அதிகாரிகள் எங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தனர். நல்ல சாப்பாடு கொடுத்தார்கள். நிறைய உதவி செய்து கொடுத்தார்கள்.

இன்று ஒரு மாணவர் இறந்துவிட்டார் என்று செய்து வந்துள்ளது. எங்களுக்கு அச்சமாக உள்ளது. எங்களுடைய சீனியர்களும், இன்னும் சில நண்பர்களும் கிழக்குப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் இந்தியா வர வேண்டும்.”

ஃப்ரீமி ஃப்ரீனிக்ஸ் - சென்னை: ”நாங்கள் மேற்கில் உஷ்கரோத் என்ற இடத்தில் இருந்தோம். நாங்கள் இருந்த பகுதி பாதுகாப்பாகத்தான் இருந்தது. போர் தகவல் காரணமாகவே நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். உக்ரைனிலிருந்து ஹங்கேரி வழியாக வெளியேற இந்திய தூதரம் அனைத்து உதவிகளையும் செய்தது. உணவு, இருப்பிடம் என்று எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னுடைய நண்பர்கள் கீவ் பகுதியில் உள்ளனர். அவர்களை அரசு உடனடியாக அழைத்து வர வேண்டும்.”

மெர்லினா - திருப்பூர்: "நாங்கள் மேற்குப் பகுதியில் இருந்ததால் எங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை. நாங்கள் உக்ரைன் தலைநகர் கீவ் வழியாக பயணிக்கவில்லை. அங்கு சென்றவர்கள் சிக்கிக் கொண்டார்கள். நாங்கள் ஹங்கேரி வழியாக வந்ததால் இந்திய தூதரகம் உதவியுடன் பாதுகாப்பாக இந்தியா வரவழைக்கப்பட்டோம். எங்களது பிற நண்பர்களும் மீட்கப்பட வேண்டும். அவர்களும் விரைவாக இந்தியா வர வேண்டும்.”

கார்கிவ் நகரில் இன்று நடந்த ரஷ்யத் தாக்குதலில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழிந்தார் என்றச் அனைத்து இந்தியர்களிடத்திலும் உக்ரைன் போரின் தீவிரத் தன்மையை உணரச் செய்திருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும் கூடியுள்ளது. உக்ரைனில் வரும் நாட்களில் போரின் தீவிரம் அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசு விரைவாக செயல்பட்டு அனைத்து மாணவர்களையும் மீட்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x