Published : 01 Mar 2022 07:57 AM
Last Updated : 01 Mar 2022 07:57 AM
எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி அமைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன் – பாகம் 1’ தன்வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
உங்களில் ஒருவனான எனது அனுபவங்களில் சிலவற்றை இந்தச் சமுதாயத்துக்குச் சொல்லியாக வேண்டும் என்ற கடமையின் காரணமாக அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக நான் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இதனை வாசிப்பதன் மூலமாக உங்களில் ஒருவனாக நான் எப்படி முளைத்தேன் என்பதை நீங்கள் அறியலாம்.
1953-ம் ஆண்டு மார்ச் 1-ல் நான் பிறந்தேன்.1976-ம் ஆண்டு பிப் 1-ல் மிசா சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்றுச் சுவடுகள்தான் இந்தப் புத்தகம். பிற்காலத்தில் தான் என்னவாக ஆக வேண்டும் என்பதை மிகச் சிறுவயதில் ஒருவன் தீர்மானித்து விட்டால், அதில் இருந்து இம்மியளவும் விலகாமல் பயணித்தால், அந்த இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவான் என்பதற்கு அடையாளம்தான் நான்.
அத்தகைய அடையாளங்களின் தொகுப்புதான் இந்த நூல். அந்த இலக்கை அடைவதற்கு நான் எந்த சாகசங்களும் செய்யவில்லை. சாகசங்கள் செய்யத் தேவையுமில்லை. நான் என்னுடைய இயல்பிலேயே இருந்தேன். என்னுடைய இயல்பே என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
நான் தனி மனிதனல்ல
இந்தப் புத்தகத்தில் நான் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான மனிதர்களின் முகங்களை நீங்கள் பார்க்கலாம். என்னோடு பயணப்பட்ட மனிதர்கள், எனக்குத் துணையாக வந்தவர் கூட்டம் பெரியது. நான் தனிமனிதனல்ல என்பதை நீங்கள் அறியலாம். பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியநால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள்தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள். இந்த நால்வரும் தனிமனிதர்கள் அல்ல. தத்துவத்தில் அடையாளங்கள். அத்தகைய தத்துவத்தின் அடையாளமாகவே நான் இருக்க விரும்புகிறேன். எனது தத்துவத்துக்கு 'திராவிட மாடல்' என்று பெயர். அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை ஆகும். கல்வியில், வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், சமூக மேம்பாட்டில் இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி என்பது அனைத்து சமூகங்களையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும். அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு.
இந்த கோட்பாட்டை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ராகுல்காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி ஆகியோர் இங்கே அழைக்கப்பட்டுள்ளார்கள்.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு, மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டாக வேண்டும்.
இங்கு சட்டத்தின் ஆட்சியாக மட்டுமல்லாமல், சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கூட்டமைப்பை திமுகசார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
ஸ்டாலின் இளமை ரகசியம் என்ன?
நூல் வெளியீட்டு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘நேற்று எனது அம்மா என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் என்றார். நானும் தெரியும் என்றேன். அவருக்கு எவ்வளவு வயது இருக்கும் என நான் அம்மாவிடம் கேட்டேன். அவர் தெரியாது என்றார்.
நான் ஸ்டாலினுக்கு 69 வயது ஆகிறது என்றேன். அம்மா அதை நம்ப முடியாமல் வியந்தார். எத்தனை வயது இருக்கும் என்று நினைத்தீர்கள்? என்று அம்மாவிடம் கேட்டேன். சுமார் 58 முதல் 60 வயது இருக்கும் என அம்மா கூறினார். பின்னர் நான் சொன்ன வயதை கூகுளில் தேடி ஒப்பிட்டு பார்த்து, நான் கூறிய வயதை ஏற்றுக்கொண்டார். ஸ்டாலினின் இளமை ரகசியம் குறித்து இந்த நூலில் எழுதப்பட்டிருக்கிறதா என தெரியவில்லை. எழுதாமல் இருந்தால், அடுத்த பாகத்தில் கட்டாயம் அவர் எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.
வேற்றுமையில் ஒற்றுமை
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது:
செயலால் மக்கள் மனதில் நிற்பவர் மு.க.ஸ்டாலின். 13 வயதில் இருந்தே அரசியல் களத்தில் இருப்பவர். உழைக்கும் மக்கள் மு.க.ஸ்டாலினை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். காஷ்மீருக்காக தமிழகம் குரல் கொடுத்தது. அதற்காகத்தான் நான் இங்கு வந்து இருக்கிறேன். எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும், நான் எப்படி இருக்க வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பது எனது உரிமை. அது தனி மனித சுதந்திரம். தனிப்பட்ட ஒருவரின் கருத்தை இதில் திணிக்கக் கூடாது. பல கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவியுள்ளன. பல வேற்றுமைகள் இருந்தாலும் அதிலும் ஒற்றுமையாக இருப்பதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பு.
மக்களின் ஒப்புதல் இன்றி ஜம்மு-காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தமிழகத்தை மூன்றாக பிரித்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஜம்முவில் தொடங்கிய பிரிவினை அங்கேயே முடிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வகுப்புவாத சக்திகளை அழிக்க நாம் ஒன்றிணைய வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்
விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
கேரள மக்களும், தமிழக மக்களும் பல நூற்றாண்டுகளாக நண்பர்களாகவும், சகோதர, சகோதரிகளாகவும் உள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் திராவிட இயக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட திராவிட இயக்கப் பிரச்சாரத்தை, தற்போது ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் மாநில தலைவராவதற்கு முன்பு, பல ஆண்டுகளாக இளைஞரணி தலைவராக பதவி வகித்தார். அவர் சென்னை மாநகராட்சி மேயராகவும், துணைமுதல்வராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது முதல்வராகவும் உயர்ந்துள்ளார்.
நாட்டில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்துஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் முதல் ஆளாக அதை தட்டிக் கேட்பவர் முதல்வர் ஸ்டாலின். இந்தியா பல்வேறு மொழிகளையும், கலாச்சாரத்தையும் கொண்டது. வகுப்புவாத சக்திகளை ஒழிக்கவும், ஜனநாயகத்தைக் காக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சமூகநீதிக்கு முன்னுரிமை அளிக்கும் தமிழகம்
பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:
ஒவ்வொரு காலகட்டத்திலும் சரித்திரம் படைத்த ஒருவர் உருவாவார். அப்படி ஒருவர்தான் மு.க.ஸ்டாலின். சமூகநீதிக்கு முன்னுரிமை அளித்து தமிழகத்தில் ஆட்சி நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிஹாரில் சமூகநீதிக்காக இன்றும் போராட வேண்டிய நிலை இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் விளங்குகிறது. இது ஒரு வித்தியாசமான சமூகம். தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு மாற்றங்களை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார். அதிகபட்ச பாரம்பரியத்துடன் தமிழகம் இருப்பதை பார்த்து ரசிக்கிறேன். சமூகநீதி, ஒற்றுமை, நியாயம், ஆனந்தம் என அனைத்தும் தமிழகத்தில் உள்ளன. பல தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வாக தமிழகம் விளங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...